உலக மல்யுத்தப் பொழுதுபோக்கு (டபிள்யூ.டபிள்யூ.இ), இந்தியப் பங்கேற்பாளர்களுக்குப் புதியதல்ல. WWE சாம்பியனான கிரேட் காளியின் பயிற்சியின் கீழ், நிறைய மல்யுத்த வீரர்கள் உருவாகிறார்கள். அந்த வரிசையில், இந்தியாவின் முதல் பெண் மல்யுத்த வீரராக ஹரியானாவின் கவிதா தேவியும் தற்போது இணைந்துள்ளார்.
முதல் போட்டியில், நியூஸிலாந்து மல்யுத்த வீரர் டகோட்டா காய் (Dakota kai) உடன் போட்டிபோட்ட கவிதா, முதல் சுற்றில் தோல்வி அடைந்தாலும், அவரது மல்யுத்தத் திறன்கள் மற்றும் அவரது ஆடை (சல்வார் கமீஸ்) மல்யுத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
பஞ்சாப் மல்யுத்த ஊக்குவிப்பு மற்றும் பயிற்சி அகாடமியில் ஹரியானாவிலிருந்து வருகை தந்த மல்யுத்த வீரர், தி கிரேட் காளி (தலிப் சிங் ரானா) வழிகாட்டலின் கீழ், ஒரு தொழில்முறை மல்யுத்த வீரராகப் பயிற்சிபெற்றார். இவர், பி புல் புல் (B Bull Bull) என்கிற பெண் மல்யுத்த வீரருடன் மல்யுத்தம் செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் அதிக அளவு பகிரப்பட்டது. அந்த வீடியோவுக்குப் பின்னர், அவர் பெரிய அளவில் புகழ்பெற்றார்.
WWE டேலன்ட் டெவலப்மென்ட் துணைத் தலைவர் கனியன் சேமான், “அவர் ஒரு விளையாட்டு வீரர் மற்றும் மிக வலுவான பெண், WWE-வில் வரவிருக்கும் மே யங் கிளாசிக் போட்டியில் நிச்சயம் அவரது திறமையை வெளிப்படுத்துவார்’ என்றார். இந்த வாய்ப்பைப் பற்றி பேசிய கவிதா, “WWE -யின் முதல் பெண்கள் போட்டியில் போட்டியிடும் முதல் இந்தியப் பெண்ணாக நான் கருதப்படுகிறேன். மற்ற இந்தியப் பெண்களை ஊக்குவிப்பதற்காகவும், இந்தியாவைப் பெருமைப்படுத்தவும் இந்த மேடையைப் பயன்படுத்த விரும்புகிறேன்” என்றார்.