தென்னிந்தியத் திரையுலகில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்கள் மட்டுமே இதுவரையில் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த படங்களாக இருந்தன. தற்போது கன்னடத்திலும் பல வித்தியாசமான படங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. ஏற்கெனவே அந்தப் படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளிவர ஆரம்பித்துவிட்டன.
யாஷ் நடித்து கன்னடத்தில் வெளிவந்த ‘கேஜிஎப்’ படம் மற்ற மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியாகி இந்திய அளவில் வரவேற்பைப் பெற்ற பிறகு கன்னடப் படங்களின் மீதும் இந்திய சினிமா ரசிகர்களின் பார்வை திரும்பியுள்ளது.
அந்த விதத்தில் தற்போது ‘பயில்வான்’ கன்னடப் படத்தின் மீது பார்வை விழுந்துள்ளது. ‘நான் ஈ’ சுதீப் நாயகனாக நடிக்கும் ‘பயில்வான்’ படத்தை கிருஷ்ணா இயக்க, சுனில் ஷெட்டி, ஆகன்க்ஷா சிங், சுஷாந்த் சிங் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் டீசர் நேற்று யு டியூபில் வெளியிடப்பட்டது. 24 மணிநேரத்திற்குள்ளாக 20 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது இந்த டீசர். கன்னட ரசிகர்களும் திரையுலகினரும் டீசரைப் பாராட்டி வருகிறார்கள். இந்த டீசரைப் பார்த்து ஹிந்தி நடிகர் சல்மான் கான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
“நாங்கள் ஆரம்பித்ததை நீங்கள் வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு சென்றுள்ளீர்கள். உங்களுக்கும், பயில்வானுக்கும் என்னுடைய வாழ்த்துகள்,” எனப் பாராட்டியுள்ளார்.

