நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் சர்க்கார் திரைப்படம், தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. தீபாவளிக்கு திரையிடப்படவிருக்கும் இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதனால், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவையே மிகப் பிரமாண்டமாக நடத்த வேண்டும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் விரும்பினர்.
அதற்கேற்ற வகையில், சென்னை, தாம்பரம் ஸ்ரீராம் இன்ஜினியரிங் கல்லூரி ஆடிட்டோரியத்தில் வைத்து, விழாவை நடத்தி முடித்துள்ளனர். இந்த விழாவுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 250 பேரை, போட்டி மூலம் தேர்வு செய்து, அவர்கள் அவ்வளவு பேரையும் சென்னைக்கு விமானத்தில் அழைத்து வந்திருந்தனர். இப்படி இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு வகைகளில் பரபரப்பை ஏற்படுத்தியதால், நிகழ்ச்சிக்கு வருகை தர வேண்டும் என ரசிகர்கள் பட்டாளம் அலை மோதியது.
ஆனால், தயாரிப்பு நிறுவனம், குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே விழாவுக்கு வருவோரை அழைத்திருந்ததோடு, அவர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியதால், சர்க்கார் படத்தில் நடித்திருக்கும் பலரும், அவர்களுடைய குடும்பத்தினரும் விழாவுக்கு வர முடியாமல் போனது. இதனால், விழா ஏற்பாட்டாளர்கள் மீது, விஜய் ரசிகர்களும், விழாவுக்கு செல்ல முடியாமல் போனவர்கள் பலரும் கடும் அதிருப்தியில் இருந்தனர்.