இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டியில் பேட்டிங்கில் ஏமாற்றிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. நேற்று, இரண்டாவது போட்டி கார்டிப் நகரில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
கோஹ்லி நம்பிக்கை
இந்திய அணிக்கு ரோகித் சர்மா (6), ஷிகர் தவான் (10) ஜோடி ஏமாற்றியது. லோகேஷ் ராகுல் (6) நிலைக்கவில்லை. ஜோர்டான், பிளங்கட் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த ரெய்னா, ஜாக் பால் பந்தில் ஒரு சிக்சர் விளாசினார். பொறுப்பாக ஆடிய கேப்டன் விராத் கோஹ்லி, அடில் ரஷித் வீசிய 11வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 57 ரன் சேர்த்த போது அடில் ரஷித் ‘சுழலில்’ ரெய்னா (27) சிக்கினார். ஜோர்டான் பந்தை சிக்சருக்கு அனுப்பிய கோஹ்லி, 38 பந்தில் 47 ரன்கள் (2 சிக்சர், ஒரு பவுண்டரி) எடுத்து வில்லே பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா, ஜோர்டான் பந்தில் ஒரு சிக்சர் பறக்கவிட்டார். ஜாக் பால் வீசிய 20வது ஓவரில் தோனி 3 பவுண்டரி அடித்தார். இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது. தோனி (32), பாண்ட்யா (12) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஹேல்ஸ் அரைசதம்
இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய், ஜாஸ் பட்லர் ஜோடி துவக்கம் தந்தது. உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார் ராய். பின் எழுச்சி கண்ட உமேஷ் ‘வேகத்தில்’ ஜேசன் ராய் (15), பட்லர் (14) அவுட்டாகினர். யுவேந்திர சகால் ‘சுழலில்’ ஜோ ரூட் (9) போல்டானார். அடுத்து வந்த அலெக்ஸ் ஹேல்ஸ், சகால், குல்தீப் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினார். ஹர்திக் பாண்ட்யா பந்தில் கேப்டன் இயான் மார்கன் (17) வெளியேறினார்.
குல்தீப் வீசிய 17வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் பறக்கவிட்ட பேர்ஸ்டோவ் (28), புவனேஷ்வர் பந்தில் வெளியேறினார். புவனேஷ்வர் வீசிய 20வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ஹேல்ஸ் அரைசதம் கடந்து வெற்றியை உறுதி செய்தார். இங்கிலாந்து அணி 19.4 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹேல்ஸ் (58), வில்லே (3) அவுட்டாகாமல் இருந்தனர். இதனையடுத்து தொடர் 1–1 என சமநிலை அடைந்தது. மூன்றாவது போட்டி நாளை பிரிஸ்டோல் நகரில் நடக்கவுள்ளது.
8
இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, தொடர்ச்சியாக 8 சர்தேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் (எதிர்: 3 முறை வங்கதேசம் + தலா 2 முறை அயர்லாந்து, இங்கிலாந்து + ஒரு முறை இலங்கை, 2018) வெற்றியை பதிவு செய்தது. இதன்மூலம் சர்வதேச ‘டுவென்டி–20’ வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்த அணிகளுக்கான பட்டியலில் 2வது இடத்தை இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான் அணிகளுடன் பகிர்ந்து கொண்டது. முதலிடத்தில் ஆப்கானிஸ்தான் (11 வெற்றி) உள்ளது.
6
இங்கிலாந்துக்கு எதிராக அசத்திய இந்திய அணி, சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் தொடர்ச்சியாக 6 தொடரை கைப்பற்றியது. அதிகபட்சமாக பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 8 தொடரை வென்றுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 2வது ‘டுவென்டி–20’ போட்டி, இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனியின் 500வது சர்வதேச போட்டியாக அமைந்தது. இதுவரை இவர், 90 டெஸ்ட், 318 ஒருநாள் மற்றும் 92 சர்வதேச ‘டுவென்டி–20’யில் பங்கேற்றுள்ளார். இதன்மூலம் சச்சின் (664 போட்டி), டிராவிட் (509) ஆகியோருக்கு பின் இந்த இலக்கை எட்டிய 3வது இந்திய வீரரானார்.