கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் அமைப்புக்கும் இடையே நடைபெற்று வரும் சம்பள விவகாரம் முடிவுக்கு வந்தால்தான் வங்கதேசத் தொடருக்குச் செல்வோம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இருதரப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவானால்தான் வங்கதேசத் தொடருக்குச் செல்வோம் என்கிறார் ஸ்மித்.
ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸுக்கு அவர் கூறும்போது, “நீண்ட நாட்களாக இதைத்தான் கூறிக்கொண்டு வருகிறோம், முதலில் ஒப்பந்தம். ஆஸ்திரேலியா ஏ அணியினர் தென் ஆப்பிரிக்கா தொடரைப் புறக்கணித்துள்ள போது நாங்கள் மட்டும் வங்கதேசத் தொடருக்குச் சென்றால் அது நியாயமாகாது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கும் இதைத் தெரியப் படுத்தியிருக்கிறோம், அவர்களுக்குத் தெரியும். நான் பாட் ஹோவர்டிடம் தனிப்பட்ட முறையிலும் எடுத்துக் கூறினேன், முதலில் ஒப்பந்தம் பிறகு கிரிக்கெட் என்று.
பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் உள்ளது. எனக்குத் தனிப்பட்ட முறையில் இவை கடினமான கணங்கள். இவையெல்லாம் முடிந்த பிறகு நான் பாட் ஹோவர்ட், ஜேம்ஸ் சதர்லேண்ட், ஆகியோரை நான் கையாள வேண்டும், எனவே என்ன மாதிரியான பாதையில் நான் பயணிக்கிறேன் என்பதில் நான் கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.