மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். சில மாதங்களுக்கு முன்பு மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற படத்தை இயக்கி ஒரு வெற்றிகரமான இயக்குனராகவும் தன்னை அடையாளப்படுத்தினார். இந்த படத்தை பார்த்துவிட்டு ரஜினியிடமிருந்து அவரது படத்தை இயக்குவதற்கு அழைப்பு வந்தும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மறுக்க வேண்டிய சூழல் உருவானதையும் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தான் டைரக்சனில் கால் வைப்பதற்கு காரணமாக அமைந்த நிகழ்வு பற்றி கூறியுள்ளார் பிரித்விராஜ்.
பொதுவாகவே ஒரு படம் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது அந்த படம் குறித்து பல சந்தேகங்களையும் விளக்கங்களையும் கேட்பது பிரித்விராஜ் வழக்கமாம்.. அது அந்தப்படம் எப்படி உருவாகப்போகிறது என்கிற ஆர்வத்தில் கேட்கப்படும் கேள்விகளே தவிர, இயக்குனர்களின் வேலையில் தலையிடும் செயல் அல்ல என்பது பிரித்விராஜின் எண்ணம்.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு அப்படி ஒரு படத்தில் சந்தேகம் கேட்டதால் அந்த படத்திலிருந்து நீக்கப்பட்டாராம். அதுவும் நல்லதுக்குதான் என நினைத்துக் கொண்டு தன்னை இன்னும் படத்தின் டெக்னிகல் வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டதால் தான், தன்னால் லூசிபர் படத்தை வெற்றிகரமாக இயக்க முடிந்தது என கூறியுள்ளார் பிரித்விராஜ்.

