இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணியிலும் பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட முக்கியமான வீரர்களின் விவரம் வெளியாகியுள்ளது.
இந்த பட்டியலில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முதல் இடத்தில் உள்ளார். இவர் 11 டெஸ்ட் போட்டிகளில் 1305 ஓட்டங்கள் குவித்துள்ளார். இவரின் சராசரி 76.76-ஆக உள்ளது, அதுமட்டுமின்றி இவர் 6 சதங்கள் அடித்துள்ளதுடன், 239 ஓட்டங்கள் அதிகபட்சமாக எடுத்துள்ளார்.
இதற்கு அடுத்த படியாக இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி உள்ளார். இவர் 10 டெஸ்ட் போட்டிகளில் 1059 ஓட்டங்கள் குவித்துள்ளார், இவரின் சராசரி 75.64 உள்ளது. இதில் 5 சதங்கள் அடங்கும்.
மூன்றாவது இடத்தில் வங்கதேச அணியின் ஆல் ரவுண்டரான சகிப் அல் ஹசன் உள்ளார். 7 டெஸ்ட் போட்டிகளில் 665 ஓட்டங்கள் குவித்ததுடன், 29 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார், இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு இவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரட்டை சதம் குவித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளாரான கசிகா ரபேடா நான்காவது இடத்தில் உள்ளார். 11 டெஸ்ட் போட்டிகளில் 57 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள இவர், இந்த ஆண்டில் மொத்தமாக 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 105 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமான இவர், 11 டெஸ்ட் போட்டிகளில் 55 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார், இந்த ஆண்டு மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இவர் 73 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 9 விக்கெட்டுகள் வீழ்த்தியதே இந்த ஆண்டின் இவரின் சிறந்த பந்து வீச்சாக உள்ளது.