கொடுங்கையூர் பேக்கரியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 47 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்க 12 பேர் கொண்ட சிறப்பு மருத்துவர் குழு ஒன்றை அமைத்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னை கொடுங்கையூரில் உள்ள பேக்கரியில் நேற்று இரவு திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் தீயணைப்பு வீரர் ஏகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 47 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் விஜயபாஸ்கர் கூறியதாவது: படுகாயம் அடைந்துள்ள 16 பேருக்கு 40 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் 85 சதவீத தீக்காயத்துடன் கவலைக் கிடமாக உள்ளனர். படுகாயம் அடைந்துள்ள அனைவருக்கும் சிகிச்சை அளிக்க 12 மருத்துவர்கள் அடங்கிய சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள விருப்பப்பட்டால் அவர் எடுத்துக் கொள்ளலாம். அங்கு அவருக்கு முதல்வரின் காப்பீட்டுத் திட்டம் இருக்கிறது. அதனை அவர் பயன்படுத்திக் கொள்ளலாம். அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் உள்ளன. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று விஜயபாஸ்கர் கூறினார்.