வனிதா விஜயகுமார் மூன்றாவது திருமணம் செய்த விவகாரத்தில் அவரது கணவர் பீட்டர்பாலின் மனைவிக்கு ஆதரவாகவும், வனிதாவிற்கு எதிராகவும் நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்திரன் எனப் பலரும் பேசி வருகின்றனர். வனிதாவும் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்த விவகாரத்தில் சூர்யாதேவி என்ற பெண்ணும் யு-டியூப் தளத்தில் வனிதாவை சகட்டு மேனிக்கு பல சமயங்களில் ஆபாச வார்த்தைகளால் கூட வசை பாடி வந்தனர். இதனால் இவர் மீது நடவடிக்கை கோரி வனிதா போலீசில் புகார் அளித்து இருந்தார். சூர்யா தேவியும் வனிதா மீது புகார் அளித்து இருந்தார். இருவரையும் போலீசார் விசாரித்து அனுப்பி வைத்தனர்.
ஆனாலும் தொடர்ந்து வனிதாவை விமர்சித்து வந்தார் சூர்யா தேவி. இந்நிலையில் நேற்று இரவு சூர்யா தேவியை வடபழனி மகளிர் போலீசார் கைது செய்தனர். பெண்ணை ஆபாசமாக திட்டுதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீதும் வனிதா புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.
சூர்யா தேவியை எப்படியாவது வெளியே கொண்டு வர முயற்சிப்பேன் என காலையில் ஒரு வீடியோ பதிவு போட்டிருந்தார் கஸ்தூரி. இந்நிலையில் ஜாமினில் சூர்யா தேவி விடுவிக்கப்பட்டார்.
இதுகுறித்து நடிகை கஸ்தூரி வெளியிட்ட ஆடியோவில், சூர்யா தேவியின் கைது மற்றும் அவரது குழந்தைகளை பார்த்து பகீர் என ஆகிவிட்டது. உடனடியாக செயலில் இறங்கி, எனது வக்கீல் மூலமாக சட்டப்படி அவரை ஜாமினில் வெளியில் கொண்டு வந்துவிட்டோம். அவர் குழந்தைகளுடன் வீட்டில் உள்ளார். இதுகுறித்து ஆன்லைன் மூலமாக செய்தியாளர்களை சந்திக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.