டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‘நம்பர்–2’ இடத்துக்கு முன்னேறினார்.
டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, 893 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருந்து ‘நம்பர்–2’ இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் முடிந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் அசத்திய இவர், 3 சதம், ஒரு அரைசதம் உட்பட 610 ரன்கள் குவித்து, தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார். தவிர, டில்லி டெஸ்டில் 243 ரன்கள் குவித்த இவர், தனது அதிகபட்ச ரன்னை பதிவு செய்தார். இத்தொடரில் அடுத்தடுத்து இரண்டு இரட்டை சதமடித்த இவர், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ‘ஹாட்ரிக்’ சதமடித்த முதல் கேப்டன் மற்றும் 6 முறை இரட்டை சதமடித்த கேப்டன் என்ற புதிய சாதனை படைத்தார். இலங்கைக்கு எதிரான தொடருக்கு முன், 6வது இடத்தில் இருந்து கோஹ்லி, வார்னர் (ஆஸி.,), புஜாரா (இந்தியா), வில்லியம்சன் (நியூசி.,), ஜோ ரூட் (இங்கிலாந்து) ஆகியோரை பின்தள்ளி 2வது இடம் பிடித்தார்.
‘நம்பர்–1’ வாய்ப்பு: தென் ஆப்ரிக்காவில் நடக்கவுள்ள டெஸ்ட் தொடரில் கோஹ்லியின் ரன் வேட்டை தொடரும் பட்சத்தில், இப்பட்டியலில் ‘நம்பர்–1’ இடத்தை கைப்பற்றலாம். இதன்மூலம் ஒரே காலகட்டத்தில், டெஸ்ட், ஒருநாள் மற்றும் சர்வதேச ‘டுவென்டி–20’ தரவரிசையில், ‘நம்பர்–1’ இடம் பிடித்த வீரர் என்ற பெருமை பெறலாம். தற்போது கோஹ்லி, ஒருநாள் மற்றும் சர்வதேச ‘டுவென்டி–20’ தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இதற்கு முன், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், மாத்யூ ஹைடன், ஒரே நேரத்தில் மூன்றுவித போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்தனர்.
புஜாரா பின்னடைவு: முதலிடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், 938 புள்ளிகளுடன் உள்ளார். இரண்டாவது இடத்தில் இருந்து இந்திய வீரர் புஜாரா, 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 3வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். மற்ற இந்திய வீரர்களான முரளிவிஜய் (25வது இடம்), ரோகித் சர்மா (40வது இடம்) முன்னேற்றம் கண்டுள்ளனர். இலங்கை அணி கேப்டன் சண்டிமால், 9வது இடத்துக்கு முன்னேறினார். அடிலெய்டு டெஸ்டில் சதமடித்து அணியை மீட்ட, ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ், முதன்முறையாக 27 வது இடம் பிடித்தார்.
ஜடேஜா சரிவு: பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிந்திர ஜடேஜா, 2வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனையடுத்து தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடா, 2வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், 4வது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தை இங்கிலாந்தின் ஆண்டர்சன், தக்கவைத்துக் கொண்டார்.
அஷ்வின் ஏமாற்றம்: ‘ஆல்–ரவுண்டர்களுக்கான’ தரவரிசையில் தமிழக வீரர் அஷ்வின், 3வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனையடுத்து இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், 3வது இடத்துக்கு முன்னேறினார். முதலிரண்டு இடங்களில் வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன், இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா தொடர்கின்றனர்.