கேரளா மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டபோது, தமிழகத்தில் இருந்து அரசியல் மற்றும் சினிமாத்துறையினர் பெரிய அளவில் உதவிக்கரம் நீட்டினர். அரசு சார்பிலும் நிதியுதவி அளிக்கப்பட்டது.
சமீபத்தில் கஜா புயல் தமிழ்நாட்டை தாக்கியதில் டெல்டா மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தன. கேரளாவில் இருந்து பெரிய அளவில் நிவாரண உதவி செய்யவில்லை என்று சோசியல் மீடியாக்களில் பலரும் கருத்து பதிவிட்டு வந்தனர்.
இப்படியான நிலையில், நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவரான கமல்ஹாசன், தமிழக மக்களுக்கு உதவுமாறு கேரள அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்திருந்தார். அவர் கோரிக்கை வைத்த 24 மணி நேரத்திற்குள், தமிழக அரசின் நிவாரண நிதிக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் ரூ. 10 கோடி நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து, கமல் டுவிட்டரில், “கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு கேரள அரசு சார்பாக ரூபாய் 10 கோடியை அளித்தற்கு, கேரள முதல்வருக்கு நன்றி. வேண்டுகோள் வைத்த 24 மணி நேரத்திற்குள் துரிதமாக நடவடிக்கை எடுத்த உங்கள் செயல்பாடு மனிதத்தின் வெளிப்பாடு” என பதிவிட்டிருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியும், “புயல் தாக்கிய அடுத்த நாளே தமிழகத்திற்கு நிவாரண பொருட்கள் அனுப்பியதோடு, இன்று தமிழகத்தின் துயரை துடைக்கும் வகையில், 10 கோடி ரூபாயை நிதியாக அளித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் சகோதரத்துவ மனிதம் கண்டு மகிழ்ச்சியோடும், நன்றிகளோடும் வணங்குகிறேன்” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.