புத்தாண்டை முன்னிட்டு, தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரின் கடற்கரை அருகிலுள்ள பூங்கா ஒன்றில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் தொடக்க வீரர் ஷிகர் தவானும் நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு, 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள்கொண்ட தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி, கேப்டவுன் நகரில் வரும் 5-ம் தேதி தொடங்குகிறது. போட்டி நடைபெறும் நியூலேண்ட்ஸ் மைதானம் பகுதியில் நேற்று மழை பெய்தது. இதனால், இந்திய வீரர்கள் உள் விளையாட்டரங்குகளில் பயிற்சி மேற்கொண்டனர்.
இந்த நிலையில், கேப்டவுனில் உள்ள விக்டோரியா – ஆல்ஃபிரட் கடற்கரைப் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில், கேப்டன் விராட் கோலியும் ஷிகர் தவானும் நடனமாடுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. புத்தாண்டை முன்னிட்டு, அந்தப் பகுதியில் இசைக்குழு ஒன்று பாடல்களை இசைக்க, அந்த இசைக்கு ஏற்றவாறு கோலியும் தவானும் நடனமாடுகிறார்கள். பிரபலமான பங்காரா நடனத்தையும் அவர்கள் முயற்சித்துப் பார்ப்பதுபோன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. ஷிகர் தவானின் மகன் ஜோராவர், தனது தந்தையின் நடனத்தை நிறுத்தி, அவரை அங்கிருந்து அழைத்துச்செல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.