கர்நாடகாவைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பல மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றவர். கடந்த சில வருடங்களாகவே பல்வேறு அரசியல் கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்.
தற்போது மத்திய பெங்களூரு தொகுதியிலிருந்து நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அவருடைய அறிவிப்புக்கு ஆம் ஆத்மி கட்சியும் ஆதரவு தெரிவித்தது. இதனிடையே, டில்லி சென்ற பிரகாஷ்ராஜ், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
இருவரும் அரசியல் பற்றியும், பெங்களூரு மத்திய தொகுதியில் பிரகாஷ்ராஜ் போட்டியிடுவது குறித்தும் விவாதித்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த சந்திப்பு பற்றி, “டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்தேன். என்னுடைய அரசியல் பயணத்திற்கு ஆதரவு கொடுத்ததற்காக அவருக்கும், அவரது ஆம் ஆத்மி கட்சிக்கும் நன்றி சொன்னேன். அவர்களது குழுவினர் பல்வேறு பிரச்சினைகளுக்கான வழிமுறைகளைப் பற்றி விவாதித்து, பகிர்ந்தோம்,” என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.