கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குற்றப்பரம்பரை பற்றிய கதைக்களத்தில் படம் பண்ணுவது தொடர்பாக பாரதிராஜாவுக்கும், பாலாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது ஊரறிந்த கதை தான். பேட்டிகள், செய்தியாளர் சந்திப்பு என இருவருமே ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டினர். இருவருமே அப்படத்தை தனித்தனியே பண்ணுவதில் தீவிரம் காட்டினர். ஆனால் இருவரது ஆசையுமே நிறைவேறவில்லை.
இந்நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய பாரதிராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என தமிழ்த் திரையுலகினர் ஒன்று சேர்ந்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதினர். கையெழுத்திட்டவர்கள் பட்டியலில் பாலாவின் பெயரும் இருந்தது. இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
சில மாதங்களுக்கு முன்பே இருவரும் நேரில் பேசி சமரசமாகி விட்டார்களாம். இப்போது அவர்கள் இருவருக்குள்ளும் எந்தப் பிரச்சினையும் இல்லையாம். அதனால் தான் பாரதிராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என பாலாவும் விருப்பம் தெரிவித்துள்ளாராம்.