Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

கிறிஸ்டியானோ ரொனால்டோ எனும் பதப்படுத்தப்பட்ட ஒயின்!

August 26, 2017
in Sports
0
கிறிஸ்டியானோ ரொனால்டோ எனும் பதப்படுத்தப்பட்ட ஒயின்!

அவரே தான்… மீண்டும் அவரே தான்…கடந்த ஜூலையில் தொடங்கிய வேட்டை நிற்காமல் தொடர இப்போது மீண்டும் ஒரு பதக்கத்தை ஏந்திவிட்டார். 2016-17 கால்பந்து சீசனின் தலைசிறந்த வீரர் விருதினை வென்றிருக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அதுவும் தொடர்ந்து இரண்டாவது முறையாக. யூரோ கோப்பை, லா லிகா, சாம்பியன்ஸ் லீக், கிளப் உலகக் கோப்பை, ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை என கடந்த 12 மாதங்களாக வெறித்தன வேட்டையாடிய ரொனால்டோ இன்னும் அதே வேகத்தோடு பயணித்துக்கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு அவர் இந்த விருதினை வென்றபோது, ‛இந்த மேடையில் ரொனால்டோ ஏறுவது இதுவே கடைசி’ என பலரும் ஆருடம் கூறினர். “31 வயதாகிவிட்டது. வேகம் குறைந்துவிடும். மெஸ்ஸி இவரைவிட 2 வயது இளையவர். இனி அவரின் ஆதிக்கம் ஓங்கும்” என்றனர் நிபுணர்கள். ஆனால் இந்த ஆண்டு நடந்தது ‘கிளீன் ஸ்வீப்’. எங்கெல்லாம் சாதிக்க முடியுமோ அங்கெல்லாம் சாதித்தார் ரொனால்டோ. எந்தக் கோப்பையையெல்லாம் வெல்ல முடியுமோ அவை அனைத்தையும் வென்று அசத்தினார். “வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் உன்ன விட்டுப் போகல” என மொத்த உலகமும் மூக்கின் மேல் விரல் வைத்தது.
2016 ஜூலையில் கோபா அமெரிக்கா தொடரின் இறுதியில் தோற்றது அர்ஜென்டினா அணி. அதே சமயம் யூரோ கோப்பையில் போர்ச்சுகல் அணிக்காக போராடிக்கொண்டிருந்தார் ரொனால்டோ. அணியில் பெரிய நட்சத்திரங்கள் இல்லை. காலிறுதிக்கே தகுதி பெற லாயக்கற்ற அணியாகவே இருந்தது அவ்வணி. போராடி தனி ஆளாக காலிறுதிக்கு அழைத்துச்சென்றார். அதன்பிறகு கஷ்டப்பட்டுப் போராடி அந்த அணி எப்படியோ ஃபைனலுக்குள் நுழைந்துவிட்டது. ஃபைனலில் அடிபட்டு வெளியேறிய ரொனால்டோ கதறி அழுதார். ஃபிரான்சே வெற்றி பெறும் என உலகம் நம்பியது. ஆனால் அந்தப் போராளி சோடை போகவில்லை. கேப்டனின் ‘ஆர்ம் பேண்டை’ கழட்டிக்கொடுத்து வெளியேறியவர் பயிற்சியாளராய் மாறினார். பயிற்சியாளர்கள் நிற்கும் டெக்னிக்கல் லைனில் நின்று கொண்டு தன் வீரர்களை உத்வேகப்படுத்தினார். அந்த சூரிய அஸ்தமனத்தின்போது கோப்பை ரொனால்டோவை முத்தமிட்டிருந்தது.

பின்னர் ஸ்பெயினில் லாலிகா, சாம்பியன்ஸ் லீக் என மெஸ்ஸியுடன் நேரடி மோதல். கிளப் உலகக்கோப்பையை சத்தமில்லாமல் வென்று வந்தது ரியல் மாட்ரிட். அதன்பிறகு ரொனால்டோ சற்று சறுக்கவே செய்தார். அவ்வப்போது காயம், அடிக்கடி ஜிடேன் தந்த ஓய்வு என பங்கேற்ற போட்டிகளின் எண்ணிக்கை குறைந்தது. சாம்பியன்ஸ் லீகில் 523 நிமிடங்கள் கோலே அடிக்காமல் தினறினார். ‛அவ்ளோதான்… இனி ஆஃப் ஆகிடுவார்’ என்று பார்த்தால், ஹரி பட கேமராமேன் போல் கிளைமேக்சில் வேகமெடுத்தார் ரொனால்டோ. காலிறுதியில் பலம் வாய்ந்த பேயர்ன் மூனிச்சோடு ஹாட்ரிக், அரையிறுதியில் உள்ளூர் வைரி அத்லெடிகோ மாட்ரிடுக்கு எதிராக ஹாட்ரிக் அடித்து அல்லு கிளப்பினார்.
அதேசமயம் வழக்கம்போல் லாலிகாவில் கோல் மழை பொழிந்து கொண்டிருதார் மெஸ்ஸி. ரொனால்டோவிற்கு பெரும்பாலான ‘அவே’ கேம்களில் ஓய்வளித்துவிட்டு பொடுசுகளை வைத்தே பொளந்துகட்டினார் ஜிடேன். அதனால் கோல் எண்னிக்கையில் ரொனால்டோ மிகவும் பின்தங்கியே இருந்தார். கடைசி வாரங்களில் தொடர் சூடுபிடித்தது. பார்சிலோனாவைவிட 3 புள்ளிகளே அதிகம் பெற்றிருந்தது மாட்ரிட். ஒரு போட்டியில் தோற்றாலும் கோப்பை கையைவிட்டுப் போய்விடும். அதுவரை சைலன்ட் மோடில் வைத்திருந்த ரொனால்டோவை வைப்ரேட் மோடிற்கு மாத்தினார் ஜிஜூ. அசால்டாக அனைத்து அணிகளையும் சுருட்டி வீசி, பார்சிலோனாவிற்கு சிறிதும் வாய்ப்பளிக்காமல் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் லாலிகா கோப்பையைத் தூக்கியது மாட்ரிட்.

லாலிகாவை மாட்ரிட்டிடம் இழந்த பார்சிலோனா அணி, சாம்பியன்ஸ் லீகில் யுவன்டஸ் அணியிடம் தோற்று வெளியேறிருந்தது. யுவன்டசிற்கும் மாட்ரிட்டுக்குமான அந்த இறுதிப்போட்டி யுவன்டஸ் கேப்டன் புஃபோனுக்கும் ரொனால்டோவுக்கும் இடையேயான யுத்தமாகவே கருதப்பட்டது. புஃபோன் – 40 வயதிலும் ஃபிட்டாக களம் காணும் கோல்கீப்பர். 2006ல் இத்தாலி அணிக்காக உலகக்கோப்பை வென்றவர். கால்பந்து ரசிகர்கள் பேதம் பார்க்காமல் இவர் மீது மரியாதை வைத்திருக்கின்றனர். அவர் ‘சிறந்த வீரர் விருதினை’ வாங்குவதற்காகவேண்டியாவது யுவன்டஸ் வெல்ல வேண்டுமென்று பலரும் பிராத்தனை செய்தனர்.

“மெஸ்ஸி, சுவார்ஸ், நெய்மார் மும்மூர்த்திகளை இரண்டு சுற்றுகளிலும் ஒரு கோல் கூட அடிக்க விடாத அவரைத்தாண்டி ரொனால்டோவால் ஒன்றும் செய்துவிட முடியாது” என்று மார்தட்டினார்கள் பார்கா வெறியர்கள். அங்கும் தான் யார் என்பதை நிரூபித்தார் சி.ஆர்7. ‘அரண்’ என்று அழைக்கப்பட்ட யுவன்டசின் பின்களத்தைத் தாண்டி, சுவராய் நின்ற புஃபோனைத் தாண்டி…ஒருமுறையல்ல, இருமூறை கோலடித்து அலறவிட்டார் ரொனால்டோ. 4-1 என சாம்பியனும் ஆனது ரியல் மாட்ரிட். அத்தொடரின் நவீன வரலாற்றில் கோப்பையைத் தக்கவைத்துக்கொண்ட முதல் அணி என்ற பெருமையோடு வென்றது மாட்ரிட். அந்த வெற்றிகளை தனக்கே உரிய ஸ்டைலில் உரித்தாக்கினார் ரொனால்டோ.
மனிதன் அதோடு நின்றுவிடவில்லை. ஃபெடரேஷன் கோப்பையில் போர்ச்சுகல் அணியை அரையிறுதி வரை அழைத்துச்சென்றார். அதில் தோற்ற பிறகு ஓய்விலிருந்தவர், பார்சிலோனாவுடனான ஸ்பானிஷ் சூப்பர் கப்பில் விளையாட ரெடியானார். 58ம் நிமிடம் களம்புகுந்தார். 82ம் நிமிடம் சிவப்பு அட்டை வாங்கி வெளியேறினார். அந்த 24 நிமிடங்களில் தன் அணிக்குத் தேவையான அந்த வெற்றிக்கான கோலை, அனைவரும் அசரும் வகையில் அடித்து அமர்க்களப்படுத்தினார் ரொனால்டோ. அந்தக் கோப்பையும் மாட்ரிட் வசமானது. இப்படி அனைத்தையும் தான் விளையாடிய அணிகள் வெல்ல துணையாய் இருந்தவருக்கு தற்போது மீண்டும் உச்சபட்ச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதோடு, ஆண்டின் சிறந்த ஃபார்வேடு விருதினையும் ரொனால்டோ வென்றார். ரொனால்டோவிடம் சிறந்த வீரர் விருதினை இழந்த புஃபோன், சிறந்த கோல்கீப்பருக்கான விருதினை வென்றார். ரொனால்டோவின் மாட்ரிட் டீம் மேட்சான மோட்ரிக்கும், செர்ஜியோ ரமோசும் முறையே, ஆண்டின் சிறந்த நடுகாள வீரர், சிறந்த டிஃபண்டர் விருதுகளை வென்றனர். சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருதினை ஹாலந்தைச் சேர்ந்த லீக் மெர்டன்ஸ் வென்றார்.
வயது 32 ஆகிவிட்டது. நிறைய இளம் நட்சத்திரங்கள் ஜொலிக்கத் தொடங்கிவிட்டனர். நெய்மார், போக்பா போன்றோர் உலகத் தரம் தொட்டுவிட்டனர். மெஸ்ஸி இதுவரை தான் அடையாத சர்வதேச அங்கீகாரத்துக்காக இன்னும் இரு மடங்கு போராடுவார். இப்படி இந்த வருடமும் “ரொனால்டோ அவ்வளவு தான்” என்று பலரும் பல காரணங்களை முன்வைக்கலாம். விமர்சிப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறட்டும், அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான். ரொனால்டோ ஃபிரிட்ஜிலிருந்து எடுக்கப்பட்ட திராட்சையில் போடப்பட்ட பழரசம் அல்ல, நேரம் போகப்போக கசந்து போக. அவர் அதே திராட்சை பதப்படுத்தப்பட்டு உருவான ‘ஒயின்’. ஆண்டுகள் போகப்போகத்தான் அதன் தரம் முழுசாய்த் தெரியும். இனியும் CR7 கால்கள் சரித்திரம் படைக்கும்.

Previous Post

முள்­ளி­வாய்க்­கால் மேற்கு கடற்­க­ரைப் பகு­தி­யில் கரும்­பு­லி­கள் அணி­யி­ன் சீரு­டைத் தொப்பி !!

Next Post

இலங்கை டெஸ்ட் கேப்டன் சன்டிமல் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்குத் தேர்வு!

Next Post
இலங்கை டெஸ்ட் கேப்டன் சன்டிமல் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்குத் தேர்வு!

இலங்கை டெஸ்ட் கேப்டன் சன்டிமல் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்குத் தேர்வு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures