’தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, லட்சுமிபுரத்தில் உள்ள நிலம் மற்றும் கிணற்றை மக்களுக்கு அன்பளிப்பாகத் தர தயாராக உள்ளேன்’ என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் கிராம மக்கள், குடிநீருக்காகக் கடந்த ஒரு மாதமாகப் போராடிவருகிறார்கள். ஊரில் உள்ள பொதுக் கிணற்றில் தண்ணீர் இல்லாததால், அங்கு தண்ணீர்த் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. ஊர் கிணற்றில் தண்ணீர் வற்றிப்போகக் காரணம், அந்தக் கிணற்றுக்கு அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தோட்டத்தில் மூன்று ராட்சசக் கிணறுகள் தோண்டப்பட்டு, அவற்றிலிருந்து அதிகளவு தண்ணீர் எடுக்கப்படுவதுதான். மேலும், ஓ.பன்னீர்செல்வத்தின் தோட்டத்தில் நான்கு போர்வெல்லும் போடப்பட்டிருக்கிறது. இதனால் கிராம மக்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
இந்நிலையில் இன்று, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம், இந்தக் கிணறு விவகாரம் தொடர்பாக நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், ‘லட்சுமிபுரத்தில் உள்ள நிலம் மற்றும் கிணற்றை கிராம மக்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன்’ என்று தெரிவித்தார்.