நடிகர் சிவகுமாரின் இளையமகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி, சென்னையில் இஞ்சினியரிங் முடித்துவிட்டு, அமெரிக்காவில் மேல்படிப்பு முடித்து சென்னை திரும்பினார். வந்ததும் இயக்குனர் மணிரத்னத்திடம் ‘ஆய்த எழுத்து’ படத்தில் உதவி இயக்குனராக வேலைக்குச் சேர்ந்தார். அதன்பின் அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அந்தப் படத்திலிருந்து தற்போது அவர் நடிக்கும் 17வது படமான ‘தேவ்’ படம் வரை ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி.
ஒரு முறை நடித்த இயக்குனர்களின் படத்தில் கார்த்தி திரும்பவும் நடித்ததில்லை. தமிழ் சினிமாவில் இப்படி வேறு யாராவது நடித்திருக்கிறார்களா என்பது சந்தேகம்தான். கார்த்தி நடித்து இதுவரை வெளிவந்த 16 படங்களில் “பருத்தி வீரன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், கொம்பன், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம்” ஆகிய 9 படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. “ஆயிரத்தில் ஒருவன், சகுனி, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி, காஷ்மோரா, காற்று வெளியிடை” ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்துள்ளன. தொடர்ச்சியாக நான்கு தோல்விப் படங்களைக் கொடுத்து ‘மெட்ராஸ்’ படம் மூலம் மீண்டு வந்தார் கார்த்தி.
இத்தனை படங்களில் ‘சகுனி’ படத்தில் மட்டுமே அறிமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்தார். அதற்குப் பிறகு இப்போதுதான் ‘தேவ்’ படத்தின் மூலம் மீண்டும் ஒரு அறிமுக இயக்குனரின் படத்தில் நடிக்கிறார்.