பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், தமிழில் தற்போது இயக்கி உள்ள படம் ‛தம்பி’. ஜோதிகா அக்காவாகவும், கார்த்தி தம்பியாகவும் நடித்துள்ளனர். இருவருக்கும் சமமான முக்கியத்தும் இருக்கிறது என்கிறார் ஜீத்து ஜோசப். அவர் மேலும் கூறியதாவது:
கார்த்தியும், ஜோதிகாவும் இக்கதையை கேட்டதும் நடிக்க சம்மதித்துவிட்டார்கள். அப்போதே இது பெரிய திரைப்படமாக இருக்கும் என்பது உறுதியாகி விட்டது. ஏனென்றால், இருவருமே திறமை வாய்ந்த நடிகர்கள். இப்படத்தின் கதை இரண்டு குடும்பங்களின் உறவுகளுக்கு இடையே நடக்கும் கதை. அடிப்படையில் குடும்ப கதையாக இருந்தாலும், இதில் குடும்ப உணர்வுகள், நகைச்சுவை தருணங்கள் மற்றும் திகைப்பூட்டும் காட்சிகள் நிறைந்திருக்கும்.
அம்மா, அப்பா என்று பல உறவுகள் இப்படத்தில் இருந்தாலும், அக்கா, தம்பி உறவை மையப்படுத்தி இக்கதை அமைந்திருப்பதால் கார்த்திக்கும், ஜோதிகாவிற்கும் சரிசமமான முக்கியத்துவம் இருக்கும். கார்த்தி திறமையான நடிகர். தன்னுடைய கதாபாத்திரம் என்னவென்பதைப் புரிந்து கொண்டு நேர்மையாகவும், கடின முயற்சியும் எடுத்து நடிக்கக் கூடிய மனிதர். சண்டைகாட்சிகள், சென்டிமெண்ட் காட்சிகள் என எல்லாவற்றையும் திறமையாக செய்யக்கூடியவர் கார்த்தி.
ஜோதிகா திறமையான அனுபவமிக்க நடிகை என்பதை ஏற்கனவே நிரூபித்துவிட்டார். அவருடைய நடிப்பு பாணியும், தன்னுடைய கதாபாத்திரத்தைக் கையாளும் விதமும் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த படத்திலும் சிறப்பான நடிப்பைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பே தன்னுடைய வசனங்களைப் பெற்று கொண்டு பயிற்சி எடுப்பார்.
கார்த்தி, ஜோதிகா இருவருமே தொழிலில் திறமைவாய்ந்த வல்லுநர்கள். தங்களுடைய கதாபாத்திரங்களைச் சிறப்பாக வெளிப்படுத்த வேண்டுமென்பதற்காக எந்தளவுக்கும் கடினமுயற்சி எடுக்கக் கூடியவர்கள். என்றார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.

