மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வந்த கல்யாணி பிரியதர்ஷன், தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், நடிகர் மோகன்லால் மகன் பிரணவுக்கும், கல்யாணி பிரியதர்ஷனுக்கும் இடையில் காதல் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இயக்குநர் பிரியதர்ஷனின் மகள்தான், கல்யாணி பிரியதர்ஷன்.
இயக்குநர் பிரியதர்ஷனின் படங்கள் பலவற்றில் நடிகர் மோகன்லால் தொடர்ந்து நடித்து வந்த நிலையில், இரு குடும்பத்துக்கும் இடையில் பெரும் நட்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், சிறு வயதில் இருந்தே ப்ரணவும், கல்யாணியும் நட்புடன் பழகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இருவரின் காதலும் இரு குடும்பத்திற்கும் தெரிந்து, பெரியவர்கள் காதலுக்கு சம்மதித்து விட்டதாகவும் தகவல் பரவி இருக்கும் நிலையில், காதல் செய்திக்கு தன்னுடைய கடுமையான எதிர்ப்பை பதிய வைத்திருக்கிறார் கல்யாணி.
பிரணவ் எனக்கு கூட பிறக்காத அண்ணன். அவரை சிறு வயதில் இருந்தே எனக்குத் தெரியும். அவரோடு நல்ல நட்பில்தான் இருக்கிறேனே தவிர, காதல் கத்திரிக்காயெல்லாம் கிடையாது’ என கொந்தளித்திருக்கிறார் கல்யாணி.
இருந்தபோதும், அதை யாரும் பொருட்படுத்துவது போலவே தெரியவில்லை. இவர்கள் இப்படித்தான் சொல்வர்; நாளை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவர் என, மலையாள பட உலகில் பரபரப்பாக பேசுகின்றனர். ப்ரணவும், கல்யாணியும் இணைந்து,தற்போது ஒரு படத்தில் நடித்து வருகின்றனர்.

