தனது சகோதரி திருமணத்தில், காதலன் கோரி டிரானுடன் கலந்துகொண்ட ‘ஸ்லம்டாக் மில்லினர்’ ஃபிரீடா பின்டோ புகைப்படம் வைரலாகி வருகிறது. ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மும்பையைச் சேர்ந்த ஃபிரீடா பின்டோ. ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் அவர், ரோஹன் அன்டோ என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அவரை பிரிந்த ஃபீரிடா, ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்த தேவ் படேலை காதலித்தார். இந்தக் காதலும் முறிந்தது. இப்போது, சாகசப் புகைப்படக் கலைஞரான கோரி டிரானை காதலித்து வருகிறார். ஃபிரீடாவுடன் நடித்த ஹாலிவுட் நடிகர் ஆரோன் பாலின் நண்பர்தான், கோரி டிரான். முதலில் நட்பாக பழகியவர்கள், பின்னர் காதலில் விழுந்தனர். இருவரும் ஒன்றாக நிகழ்ச்சிகளுக்குச் சென்று வந்தனர்.
இந்நிலையில் தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று கடந்த மாதம் அறிவித்தார் ஃபிரீடா. விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாக, தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, ஃபிரீடாவின் அக்கா ஷரோன் திருமணம் அசாம் மாநிலத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் நடந்தது. இதில் வருங்கால கணவர் கோரி டிரானுடன் கலந்துகொண்ட ஃபிரீடா, இந்திய முறைப்படி உடை அணிந்திருந்தார். கோரி டிரான், குர்தா, பைஜாமா அணிந்து அமர்க்களமாக வந்திருந்தார். இந்தப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஃபிரீடா. இது வைரலாகி வருகிறது.

