தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கடந்த சில வருடங்களாகவே முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தெலுங்கு, தமிழ் இரு மொழிகளிலுமே முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழில் ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசனுடனும், ஜெயம் ரவி ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்க உள்ளார் காஜல். ‘குயின்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.
தெலுங்கில் அவர் நடித்துள்ள ‘கவச்சம்’ படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிக்காக ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் காஜல். காலை 10 மணிக்கு வருவதாகச் சொன்ன காஜல் 12 மணிக்கு மிகவும் தாமதமாக வந்ததால் பலரும் கோபித்துக் கொண்டு போய்விட்டார்களாம். இருந்தாலும் ஒரு சிலர் காத்திருந்து காஜல் அகர்வால் பேட்டியை எடுத்துள்ளனர்.
அப்போது பேசிய காஜல், “இந்தியன் 2′ படத்தில் கமல்ஹாசன், ஷங்கர் ஆகியோருடன் பணிபுரிய மிகவும் ஆவலாகக் காத்திருக்கிறேன்,” என்று கூறினார். காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வாலுக்கு கல்யாணம் ஆகி குழந்தையும் பிறந்துவிட்டது. வழக்கம் போலவே, எப்போது திருமணம் என்ற கேள்வியும் காஜலிடம் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த காஜல், “தீபிகா, பிரியங்கா ஆகியோர் திருமணம் செய்து கொண்டதைப் பார்க்கும் போது எனக்கும் கல்யாண ஆசை வருகிறது. ஆனால், இப்போதுதான் நான் என்னுடைய கேரியரின் உச்சத்தில் இருக்கிறேன். அதனால், இப்போதைக்கு கல்யாணம் காத்திருக்கட்டும்,” என்கிறார் காஜல்.

