ஹாலிவுட்டின் திறமை மிக்க இயக்குனர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன் இந்தியா வந்துள்ளார். டிஜிட்டல் யுகத்தில் திரைப்படங்களின் முக்கியத்துவம் பற்றிய கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளார். அவருடன் விஷுவல் கலைஞரான டாசிடா டீன் என்பவரும் வந்திருக்கிறார். திரைப்பட பாரம்பரிய பவுண்டேஷன் என்ற அமைப்பின் அழைப்பின் பேரில் அவர் இந்தியாவிற்கு வந்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் அவரைச் சந்தித்து உரையாடினார். அந்த சந்திப்பு பற்றி “கிறிஸ்டோபர் நோனை சந்தித்தேன். ‘டன்க்ரிக்’ படத்தை டிஜிட்டல் முறையில் பார்த்ததற்கு மன்னிப்பு கேட்டேன். அதற்கு பதிலாக அவருக்கு ‘ஹே ராம்’ படத்தின் டிஜிட்டல் பிரதியைக் கொடுக்கிறேன். அவர் ‘பாபநாசம்’ படத்தைப் பார்த்திருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருந்தது,” என கமல்ஹாசன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இன்று நடைபெறும் நிகழ்வில் பல ஹிந்திப் பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர். அதற்காக வந்த ஷாரூக்கானும், நடிகர் கமல்ஹாசனும் அப்போது சந்தித்துக் கொண்டனர். கமல்ஹாசன், ஷாரூக்கான இருவரும் ‘ஹேராம்’ படத்தில் இணைந்து நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.