மலையாள சினிமாவின் பிரபல இயக்குனர் கமல். இவர் தற்போது மலையாள சினிமா நடிகர் சங்க உறுப்பினர்களை பற்றி சர்ச்சையான கருத்து ஒன்றை கூறி பிரச்னையில் சிக்கியுள்ளார். நடிகர் திலீப் விவகாரத்தில் மலையாள நடிகர் சங்கம், களேபரத்தில் இருப்பது தெரிந்ததுதான். இந்த சமயத்தில் இயக்குனர் கமல், மலையாள சினிமா நடிகர் சங்கத்தில் 500 பேர்களில் 450 பேர் வெறுமனே உதவித்தொகை உள்ளிட்ட வசதிகளை பெறுவதற்காகவே சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்றும், அவர்கள் தற்போதைய சினிமாவில் ஆக்டிவாக இல்லை என்றும் கூறியுள்ளார்.
இது சீனியர் நடிகர்களான மது, ஜனார்த்தனன், கேபிஏ.சி லலிதா மற்றும் கவியூர் பொன்னம்மா போன்ற சீனியர் நடிகர்களின் மனதை காயப்படுத்தி உள்ளது. இதனால் கோவமான அவர்கள், இயக்குனர் கமல் தங்களை பற்றி அவதூறாக கருத்து கூறியதாக கலைத்துறை அமைச்சருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளனர்.
மேலும் தாங்கள் இரண்டு மூன்று தலைமுறைகளாக சினிமாவில் நடிப்பதாகவும், தற்போது நடித்து கொண்டிருப்பதாகவும், நடிகர் சங்கத்தில் இருந்து வரும் உதவித்தொகை என்பது வெறும் பணம் மட்டுமல்ல, அது நடிகர் சங்கம் தங்கள் மீது காட்டும் அன்பின் வெளிப்பாடு என்றே கருதுகிறோம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சில முன்னணி நடிகர்களும், இயக்குனர் கமல் கூறியதை ரசிக்கவில்லை என்றே தெரிகிறது.
