எனது நோக்கம் தொடர்ந்து இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெ ளிப்படுத்த வேண்டும் என்பது தான். மற்றபடி, கபில் தேவ் சாதித்ததில் 10 சதவீதத்தை எட்டினாலே மகிழ்ச்சி தான்,’’ என, பாண்ட்யா தெரிவித்தார்.
இலங்கை சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை முழுமையாக (3–0) வென்று சாதித்தது. இதற்கான இந்திய அணியில் அறிமுக வாய்ப்பு பெற்றவர் ‘ஆல் ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா, 23.
அறிமுக டெஸ்டில் அரைசதம் அடிக்க, பாண்ட்யா எங்கள் அணியின் ‘பென் ஸ்டோக்ஸ்’ என்றார் கேப்டன் கோஹ்லி. கண்டியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி முன்னணி விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த போது, 8வது வீரராக வந்த பாண்ட்யா, 86 பந்தில் தனது முதல் சதம் அடித்து, இந்திய அணி இமாலய இலக்கை எட்ட உதவினார்.
இதையடுத்து, இந்தியாவின் அடுத்த கபில் தேவ் என, தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார். இதுகுறித்து பாண்ட்யா கூறியது:
களத்தில் பேட்டிங் செய்யும் போது, தனிப்பட்ட முறையில் எத்தனை ரன்கள் எடுத்துள்ளேன், ஏதாவது சாதித்து உள்ளேனா என்று பார்க்க மாட்டேன். இது இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.
‘எப்போதும் அணியின் முன்னேற்றத்துக்கு தான் கைகொடுக்க வேண்டும். ஸ்கோர் போர்டை பார்த்து, பின் அந்த சூழ்நிலைக்குத் தகுந்து விளையாட வேண்டும். இந்த எண்ணம் தான் எனக்கு கைகொடுத்து வருகிறது.
கபில் தேவ் அல்ல: முதன் முறையாக டெஸ்டில் 90 ரன்களை எட்டிய போது, வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறந்தன. இருப்பினும், முந்தைய சிறப்பான நிகழ்வுகளை மனதில் கொண்டு, கண்டி டெஸ்டில் சதம் விளாசினேன். வெளிப்படையாகச் சொல்வதென்றால், எனது நோக்கம் தொடர்ந்து இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை தொடர வேண்டும் என்பது தான். மற்றபடி, கபில் தேவ் சாதித்ததில் 10 சதவீதத்தை எட்டினாலே எனக்கு மகிழ்ச்சி தான்.
இவ்வாறு பாண்ட்யா கூறினார்.
தந்தை வியப்பு: பாண்ட்யாவின் அப்பா ஹிமான்சு பாண்ட்யா கூறியது:
டெஸ்ட் அரங்கில் இப்போது தான் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. களமிறங்கிய மூன்றாவது போட்டியிலேயே, ‘டுவென்டி–20’ கிரிக்கெட் போல, விரைவாக விளையாடி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கவில்லை. அரைசதத்தை எட்டிய பிறகு, அதிரடியாக ரன்கள் குவித்தது சூப்பர். நாங்கள் எல்லோரும் இந்த சதத்தை கொண்டாடினோம். பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இதுபோல, சிறப்பாக விளையாடி சதம் அடித்து இருந்தால், இந்திய அணி, எளிதாக சாம்பியன் பட்டம் வென்றிருக்கும். பாண்ட்யாவின் பேட்டிங் நாளுக்கு நாள் முன்னேறி வருவதை நினைத்து பெருமைப் படுகிறேன்.
இவ்வாறு ஹிமான்சு பாண்ட்யா கூறினார்.