தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ படநிறுவனத்தின் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘காலா’ படம் கடந்த ஜூன் 7-ஆம் தேதி வெளியானது. ‘காலா’ ரிலீஸ் ஆனதும் கபாலி அளவுக்கு இருக்கிறதா இல்லையா என்பதே ரசிகர்கள் மத்தியில் விவாதப்பொருளானது.
விநியோகஸ்தர்கள் மற்றும் திரையுப்படத்துறையினர் மத்தியில் கபாலி வசூலை காலா முறியடித்துவிட்டதா இல்லையா என்பதே கேள்வியாக இருந்தது. அதற்கான விடை தற்போது தெரிய ஆரம்பித்திருக்கிறது.
கபாலி படம் உலகஅளவில் முதல்நாள் வசூல் செய்த தொகை 87 கோடி ரபாய். தமிழ்நாடு அளவில் 25 கோடியை வசூல் செய்தது. காலா படமோ உலக அளவில் முதல் நாள் வசூல் செய்த தொகை வெறும் 50 கோடி மட்டுமே. தமிழ்நாடு அளவில் முதல்நாள் வசூலித்த தொகை வெறும் 12.88 கோடி.
தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட கபாலி படம் முதல்நாளில் 10.20 கோடி வசூலித்தது. காலா தெலுங்குப்பதிப்போ வெறும் 3 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. ஸ்பைடர் படத்தின் புரட்யூஸரான பிரசாத் காலா தெலுங்கு பதிப்புக்கு 20 கோடி அட்வான்ஸ் கொடுத்து படத்தை வெளியிட்டார். தற்போதைய கணக்கின்படி தெலுங்கில் 8 கோடிதான் வசூல் செய்யும் என்கின்றனர்.
‘காலா’ படத்தின் சென்னை சிட்டி உரிமையை சத்யம் சினிமாவின் எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. கோயம்பத்தூர் ஏரியா உரிமையை திருப்பூர் சுப்பிரணியன் 12 கோடி அட்வான்ஸ் வாங்கியுள்ளார். தற்போதைய சூழலில் கோவை ஏரியாவில் காலா படம் 6 கோடிதான் வசூல் செய்யும்.
மதுரை ராமநாதபுரம் ஏரியா உரிமையை பைனான்சியர் அன்பு செழியனும், சேலம் ஏரியா உரிமையை ‘7G’ சிவாவும் வாங்கியுள்ளார்கள். இவர்களுக்கும் பணம் திருப்பிக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.