பொதுவாக முன்னணி ஹீரோக்களை சந்திக்க, சம்பந்தப்பட்ட ஹீரோவின் ரசிகர்கள்தான் காலையிலேயே அவர்களது வீட்டின் முன் தவம் கிடப்பார்கள்.. இதில் சற்று வித்தியாசமாக கோழிக்கோட்டை சேர்ந்த நட்சத்திரா என்கிற ரசிகை ஒருவர், தனது அபிமான நடிகரான மம்முட்டியை சந்திப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே மம்முட்டியின் வீட்டு வாசலில் வந்து நின்று விட்டாராம். அதுமட்டுமல்ல, தனது தோழிகள் சிலரையும் கூடவே அழைத்தும்ம் வந்திருந்தாராம் அந்த ரசிகை.. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக தனது வீட்டு வாசலில் இப்படி ஒரு ரசிகை நிற்கும் செய்தி மம்முட்டிக்கு தெரியவந்தது.
ஞாயிறு என்றாலும் அன்றைய தினமும் படப்பிடிப்பிற்காக கிளம்பி கொண்டிருந்த மம்முட்டி, வாசலுக்கு வந்தபோது அந்த ரசிகையை அழைத்துள்ளார். எதிர்பாராமல் மம்முட்டியை கண்டதும் மம்முட்டியை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்து விட்டார் அந்த ரசிகை. அவரை ஆறுதல் படுத்திய மம்முட்டி அவர் குறித்த விவரங்களை கேட்டுக்கொண்டு அவரையும் அவருடன் வந்தவர்களையும் நன்றாக படிக்குமாறு அறிவுரை சொல்லிவிட்டு படப்பிடிப்புக்கு கிளம்பிச் சென்றார்.

