காயம் காரணமாக வரும் 11வது ஐ.பி.எல்., சீசனில் இருந்து விலகினார் ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க்.
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க், 28. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றார். ஜோகனஸ்பர்க்கில் நடக்கும் நான்காவது டெஸ்டில் களமிறங்க இருந்தார். ஆனால், வலது கால் எலும்பில் ஏற்பட்ட வலி காரணமாக, கடைசி நேரத்தில் விலகினார்.
டெஸ்ட் தொடர் முடிந்து ஆஸ்திரேலியா திரும்பியதும், இதற்காக சிகிச்சை எடுக்கவுள்ளார். இதனால், வரும் 11வது சீசன் ஐ.பி.எல்., தொடரிலும் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது. கோல்கட்டா அணிக்காக இவர், ரூ. 9.4 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டு இருந்தார். இவருக்குப் பதில், மிட்சல் ஜான்சன் அணியில் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது.
மூன்றாவது முறை
ஐ.பி.எல்., தொடரில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பங்கேற்காமல் உள்ளார் மிட்சல் ஸ்டார்க். கடந்த 2016ல் கால் பாதத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக, பெங்களூரு அணியில் இருந்து விலகினார். 2017 தொடரில், ஆஷஸ் தொடரை முன்னிட்டு, ஏலத்தில் பங்கேற்கவில்லை. தற்போது, மீண்டும் காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.