600 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் ‘2.0’ படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் நவம்பர் 29ம் தேதி வெளியாகிறது. வெளியீட்டிற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் தினமும் புதிது புதிதாக தியேட்டர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது என்கிறார்கள்.
இப்படத்தின் முதல் பார்வை வெளியீட்டு விழா மும்பையில் 2 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றது. பின்னர் இசை வெளியீட்டு விழாவை துபாயில் கடந்த வருடம் பிரம்மாண்டமாக நடத்தினார்கள். சென்னையில் டிரைலர் வெளியீட்டு விழா இந்த மாதம் நடைபெற்றது. முதலில் திட்டமிட்டபடி ஐதராபாத்தில் இப்படத்தின் டீசர் வெளியீடு ஐதராபாத்தில் நடந்திருக்க வேண்டும். ஆனால், அதை எந்த விழாவும் இல்லாமல் வெளியிட்டார்கள்.
தெலுங்கிலும் நேரடிப் படம் வெளியாக உள்ளதால் அங்கு எந்த விழாவும் நடத்தவில்லை என்ற ஒரு குறை இருக்கிறது. இருப்பினும் இன்று ஐதராபாத்தில் 2.0 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுகிறது. கடந்த வாரம் மும்பையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புக்கு கூட செல்லாத ரஜினிகாந்த், இன்று ஐதராபாத்தில் நடக்கும் சந்திப்பில் கலந்து கொள்கிறாராம். அதனால், தெலுங்கிலும் 2.0 படத்தின் பரபரப்பு ஆரம்பமாகிவிடும்.