தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக இளையராஜாவின் 75வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ‘இளையராஜா 75’ என்ற நிகழ்ச்சி நேற்று, இன்று என இரண்டு நாட்களாக நடக்கிறது.
பல சர்ச்சைகள், நீதிமன்ற வழக்குகள் எனக் கடந்து நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் கடைசி சர்ச்சையாக தயாரிப்பாளர் சங்கத்தில் சமீபத்தில் துணைத் தலைவர் ஆக பதவியேற்ற பார்த்திபன் ராஜினாமா செய்தது அமைந்தது.
‘இளையராஜா 75’ நிகழ்ச்சிக்காக பார்த்திபன் பல புதுமையான விஷயங்களை செய்ய நினைத்ததாகவும், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க அவருடைய பாணியில் வித்தியாசமான விதத்தில் தொகுப்புரையை எழுதியிருந்தார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அவர் செய்ய நினைத்தவற்றை சங்க நிர்வாகிகள், விழாக் குழுவினர் சிலர் செய்யவிடவில்லை எனத் தெரிகிறது.
கடந்த இரண்டு நாட்களாகவே மற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத விதத்தில் டுவீட்டிகளைப் போட்டு வருகிறார் பார்த்திபன். அவருடைய ராஜினாமா பற்றி சமசரசம் பேசப்பட்டதாகவும் அதைப் பார்த்திபன் ஏற்க மறுத்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள். நிகழ்ச்சிக்கு பார்த்திபன் வந்தால் அவர் சமரசம் ஆகிவிட்டார், வரவில்லை என்றால் அவருடைய ராஜினாமா உறுதி என்றே பேசப்பட்டது.
அதே சமயம், நேற்றைய விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணமே பார்த்திபன் தான் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
நேற்று, ரகுமானை அவரது வீட்டிற்குச் சென்று பூங்கொத்து கொடுத்து விழாவிற்கு வழியனுப்பி வைத்திருக்கிறார் பார்த்திபன். அப்போது பார்த்திபனிடம் நீங்கள் வரலையா எனக் கேட்க பார்த்திபன் வருகிறேன் என பதிலளித்து விழாவுக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
ரகுமான் விழாவிற்கு வந்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பார்த்திபனுக்கு விஷால் அனுப்பிய ‘வாட்சப் மெசேசையும்’ பார்த்திபன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதில், “சார், நீங்கள் வரலாற்றை உருவாக்கி விட்டீர்கள். ஐ லவ் யூ. என்னிடம் வார்த்தைகளே இல்லை. மற்றவர்களை விட உங்களை அங்கு ‘மிஸ்’ செய்தேன். எனக்காகத்தான் நீங்கள் இதைச் செய்தீர்கள் எனத் தெரியும். எப்போதும் உங்களை நேசிப்பேன்” என விஷால் பார்த்திபனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் இரு பெரும் இசை மேதைகளான இளையராஜாவையும், ரகுமானையும் ஒரே மேடையில் பார்க்கவும், பேசவும், பாடவும், இசைக்கவும் வைத்த பார்த்திபன் அவர்கள் இருவருக்காகவாவது நிகழ்ச்சிக்குச் சென்றிருக்கலாம்.

