‘‘பெரும்பாலான விக்கெட்கீப்பர்கள் எதிரணியின் பேட்ஸ்மேனுடன் வார்த்தை போரில் ஈடுபடுவர். ஆனால், தோனி எதுவும் தவறாக பேச மாட்டார். இவரது வழியை பின்பற்றுகிறேன்,’’என, சகா தெரிவித்தார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 36. கடந்த 2015 கடைசியில் திடீரென டெஸ்ட் அரங்கில் இருந்து விடைபெற்றார். இதையடுத்து, இவரது இடம் விரிதிமன் சகாவுக்கு, 32, சென்றது. விக்கெட் கீப்பிங்கில் மட்டுமன்றி பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்த, டெஸ்ட் அணியில் தவிர்க்க முடியாத வீரராக உருவாகி வருகிறார்.
தனது விக்கெட் கீப்பிங் பணி குறித்து சகா கூறியது:
முன்னாள் கேப்டன் தோனி, விக்கெட் கீ்ப்பிங்கின் போது எந்த ஒரு வீரருடன், வார்த்தை போரில் ஈடுபட்டு பார்த்தது கிடையாது. போட்டியில் எதிரணி வீரர்களை திட்ட வேண்டும் என்பது கட்டாயம் அல்ல.
தோனி மாதிரி விளையாட விரும்புகிறேன். மற்றபடி, சில நேரங்களில் ஆடுகளம் சரியில்லை, மோசமாக விளையாடுகிறீர்கள் என, ஏதாவது சொல்லி கவனத்தை திசை திருப்பலாம், இதுவே போதுமானது.
யார் ஹீரோ:
என்னைப் பொறுத்தவரை சிறு வயதில் இருந்தே முன்னாள் ஆஸ்திரேலிய கீப்பர் கில்கிறிஸ்ட் ஆடும் ‘ஸ்டைல்’ அதிகம் பிடிக்கும். மார்க் பவுச்சர் (தெ.ஆப்.,), இயான் ஹீலே (ஆஸி.,) சிறப்பாக செயல்படுவர் என்றாலும், கில்கிறிஸ்ட் தான் எனது ஆஸ்தான ஹீரோ.
அஷ்வின் சவால்:
சில குறிப்பிடத்தக்க ஆடுகளங்களில் சுழல் வீரர்கள் அஷ்வின், ஜடேஜா பவுலிங்கின் போது விக்கெட் கீப்பிங் செய்வது சவாலானது. இருப்பினும் இது எனக்கு அதிகம் பிடிக்கும். ஏனெனில், அதிகமான பந்துகள், பேட்ஸ்மேன்களை ஏமாற்றி எனது கைக்கு வரும். இப்படி வருவதால், கூடுதல் கவனத்துடன் செயல்படலாம். தவிர, விக்கெட் கீப்பிங் திறமையை வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
எது சிறந்தது:
டெஸ்ட் அரங்கில் ஸ்டீவ் ஓ கீபே (புனே, 2015), டிவிலியர்ஸ் (2015, பெங்களூரு), மாத்யூ வேட்டுக்கு (பெங்களூரு, 2017) எதிராக நான் செய்த ‘கேட்ச்’களில் சிறப்பானவை.
பேட்டிங்கில் 6 அல்லது 7 என, எந்த இடத்தில் களமிறங்குவது என்பது அணி நிர்வாகம் முடிவு செய்யும். இதற்கேற்ப நாம் ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்ள வேண்டும். போட்டியின் சூழ்நிலையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இலங்கைக்கு எதிரான தொடரை 3–0 என கைப்பற்றுவது குறித்து இதுவரை யோசிக்கவில்லை. இப்போதைய நிலையில் 2–0 என, முன்னிலையில் உள்ளோம். அடுத்த போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு, முழுமையாக கைப்பற்ற முயற்சிப்போம்.
இவ்வாறு சகா கூறினார்.
100
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் குறித்து சகா கூறுகையில்,‘‘ இது எனது 100 வது முதல் தர போட்டி தான். இது ஏதும் சாதனையா, இல்லையா எனத் தெரியவில்லை. ஆனால், முடிந்தவரை அதிகமான போட்டிகள் விளையாட விரும்புகிறேன்,’’ என்றார்.
கோஹ்லி பாராட்டு
சகா குறித்து கேப்டன் கோஹ்லி கூறுகையில்,‘‘ இப்போதைய நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சகா சிறப்பான விக்கெட் கீப்பராக உள்ளார். கொழும்பு டெஸ்டில் துடிப்பாக செயல்பட்டு ‘ஸ்டம்பிங்’ (பெரேரா) செய்தார். ஸ்டம்புகளுக்கு பின் புறம் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார்,’’ என்றார்.