அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த முஜீப் ஜர்தான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
அயர்லாந்து- ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில், முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. 239 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி ஆஃப்கானிஸ்தான் சுழல் தாக்குதலில் தாக்குப்பிடிக்க முடியாமல், 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 138 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்தப் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் அறிமுகமான 16 வயது இளம் வீரர் முஜீப் ஜர்தான், 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவரது சிறப்பான பந்துவீச்சு ஆட்டநாயகன் விருதையும் பெற்றுத்தந்தது. இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் இளம்வயதில் ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் என்ற சாதனையை ஜர்தான் படைத்தார். அதேபோல், 21-ம் நூற்றாண்டில் பிறந்து சர்வதேச ஆண்கள் கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
மலேசியாவின் கோலாலம்பூரில் அண்மையில் நடந்து முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பைத் தொடரில் ஜர்தானின் சிறப்பான பந்துவீச்சின் உதவியால் ஆஃப்கானிஸ்தான் முதல்முறையாகச் சாம்பியன் பட்டம் வென்றது. 2001-ம் ஆண்டு மார்ச் 18-ல் பிறந்த முஜீப் ஜர்தான், அந்தத் தொடரில் 5 போட்டிகளில் பங்கேற்று 20 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். சர்வதேச மகளிர் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை 21-ம் நூற்றாண்டில் பிறந்த கேபி லீவைஸ் ஏற்கெனவே அறிமுகமாகிவிட்டார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகக் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற டி20 போட்டியில் ஆல்ரவுண்டரான கேபி லீவைஸ் அறிமுகமானார்.