சர்வதேச தடகள போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற உசேன் போல்ட், ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள் என இளம் தலைமுறையினருக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
மின்னல் வேக மனிதரான ஜமைக்காவைச் சேர்ந்த உசேன் போல்ட், சர்வதேச தடகள போட்டிகளில் இருந்து நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 11 முறை சாம்பியன் பட்டமும், 8 ஒலிம்பிக் தங்கப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ள அவருக்கு ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெற்ற போட்டியின் போது ரசிகர்கள் பிரியாவிடை வழங்கினர்.
தடகளத்தில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையை தன்வசம் வைத்துள்ள 30 வயதான உசேன் போல்ட் கூறும்போது, “கடினமாக உழைத்தால் எதையும் செய்ய முடியும் என்பதை நான் நிருபித்துள்ளேன். இதனால்தான் நான் இங்கு அமர்ந்து கொண்டு பேட்டி அளித்துக்கொண்டிருக்கிறேன். எனது தாரக மந்திரமே எதுவும் சாத்தியம் என்பதுதான். அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.
இளைஞர்களுக்கு அழுத்தம் கொடுக்க இது சிறந்த செய்தியாக இருக்கும் என நான் நினைக்கிறேன். இளம் தலைமுறையினருக்கு நான் அதை விட்டுச் செல்ல முடிந்தால், அது சிறந்த மரபாக இருக்கும். ஒரு சாம்பியன்ஷிப் தொடர் மட்டும் நான் என்ன செய்துள்ளேன் என்பதை மாற்ற முடியாது. 100 மீட்டர் ஓட்டத்தில் நான் வெண்கலப் பதக்கம் பெற்றதும், சிலர் என்னிடம் வந்து, குத்துச்சண்டை வீரரான முகமது அலி தனது கடைசி ஆட்டத்தில் தோல்வியை தான் எதிர்கொண்டிருந்தார், அதனால் மிகுந்த மன உளைச்சலுடன் இருக்க வேண்டாம் என்று கூறினார்கள். தடகள வாழ்க்கை முழுவதுமே சிறந்த திறனை வெளிப்படுத்தி சாதித்து காட்டியுள்ளேன். அதனால் கடைசி ஓட்டத்தில் அடைந்த தோல்வியானது, இதுவரை விளையாட்டில் நான் செய்ததை மாற்றிவிடாது.
நிச்சயமாக இனிமேல் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டேன். ஓய்வுக்குப் பிறகு மீண்டும் போட்டிகளுக்கு திரும்பி மோசமாக செயல்பட்டு, அவமானங்களை சந்தித்த பலரை பார்த்துள்ளேன். இதனால் தனிப்பட்ட முறையில் இதை நான் விரும்பவில்லை.
இவ்வாறு உசேன் போல்ட் கூறினார்