அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடைபெற்றபோது, குட்டிக்கதை மூலம் ஆளும் கட்சியை அட்டாக் செய்தார் விஜய். அதையடுத்து, தனது படத்தை ஓட வைப்பதற்காக விஜய் இப்படி பேசியிருக்கிறார் என்று ஆளும் கட்சி அமைச்சர்கள் சிலர் பேட்டிகளில் தெரிவித்தனர்.
இப்படியான நிலையில், கோவையில் உள்ள இறைச்சி வியாபாரிகள் பிகில் படத்தின் போஸ்டரில் தாங்கள் இறைச்சி வெட்ட பயன்படுத்தும் முட்டுக்கட்டையின் மீது விஜய் செருப்பு அணிந்த காலை மிதித்துக்கொண்டு அமர்ந்திருப்பதாக சொல்லி அந்த போஸ்டரை கிழித்து போராட்டம் நடத்தினர். அதையடுத்து அவர்கள் கோவை ஆட்சியர் அலுவலகத்திலும் தங்களை விஜய் அவமதித்து விட்டதாக புகார் மனு அளித்தனர்.
இந்தநிலையில், தற்போது கோவையில் பிகில் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய இறைச்சி வியாபாரிகளை சந்தித்து விஜய் ரசிகர்கள் அவர்களுக்கு இறைச்சி வெட்டும் முட்டுக்கட்டை உள்ளிட்ட சில இறைச்சிக்கடைக்கு தேவையான பொருட்களை இலவசமாக வழங்கி அவர்களின் போராட்டத்தை நிறுத்துமாறு சமாதானம் செய்துள்ளனர். இதனால் இறைச்சி வியாபாரிகள் தங்களது போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார்களாம்.

