காமெடி நடிகர் விடிவி.கணேஷ் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் இருட்டு. இதனை முகவரி, தொட்டிஜெயா, நேபாளி படங்களை இயக்கிய வி.இசட் துரை இயக்கி உள்ளார். சுந்தர்.சி, புதுமுகம் ஷாக்சி, சாய் தன்சிகா, விமலா ராமன் உள்பட பலர் நடித்துள்ளனர். படம் தணிக்கையில் படாதபாடுபட்டிருக்கிறது. இதுகுறித்து இயக்குனர் வி.இசட் துரை கூறியதாவது:
பொதுவாக பேய் படங்கள் என்றால் இந்து மற்றும் கிறிஸ்தவ மத பின்னணியில் தான் வெளிவரும். இந்தியாவிலேயே முதன் முறையாக இஸ்லாமிய மத பின்னணியில் உருவாகி இருக்கும் படம் இருட்டு. இந்துக்கள் பேய் என்பார்கள், கிறிஸ்தவர்கள் சாத்தான் என்பார்கள், இஸ்லாமியர்கள் ஜின் என்பார்கள். இந்த ஜின்னை வைத்து உருவாகி உள்ள படம். நான் ஒரு முஸ்லிம் என்பதால் அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு படமாக்கி இருக்கிறேன்.
படத்தை தணிக்கை குழுவின் பார்வைக்கு கொண்டு சென்றபோது. படம் ரொம்ப பயமுறுத்துகிறது ‛ஏ’ சான்று தான் தருவோம் என்றார்கள். ஏ சான்று பெற்றால் தியேட்டருக்கு பெண்கள் வரமாட்டார்கள். தொலைக்காட்சி உரிமம் விற்க முடியாது. எங்களுக்கு யு/ஏ வேண்டும் என்று கேட்டோம். 10 காட்சிகள் வரை நீளத்தையும், பயமுறுத்தும் தன்மையையும் குறைத்தால் யுஏ தருவோம் என்றார்கள்.
படமோ பேய் படம் அது ரசிகர்களை பயமுறுத்தத்தான் எடுக்கப்படுகிறது. அதை குறைக்க சொன்னால் எப்படி என்று வாதிட்டோம். அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. அது உங்கள் பிரச்சினை என்றார்கள். வேறு வழியில்லாமல் நான்கைந்து முக்கியமான காட்சிகளின் பயமுறுத்தலை குறைத்து யுஏ சான்றிதழ் வாங்கி இருக்கிறோம். என்றார்.

