ஒரு படத்திற்கு இலவச விளம்பரம் கிடைக்க வேண்டுமா, இந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் செய்தால் போதும், அது பற்றி உடனே சர்ச்சை எழுந்து படத்தை பரபரப்பாக்கி விடுவார்கள் என்ற தவறான எண்ணம் சிலரிடம் உள்ளது.
யோகிபாபு நாயகனாக நடிக்கும் ‘காக்டெயில்’ படக்குழுவினர், சில தினங்களுக்கு முன்பு அப்படி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தினர். முருகர் தோற்றத்தில் உள்ள யோகிபாபுவின் புகைப்படம் கொண்ட போஸ்டரை வெளியிட்டு முருக பக்தர்களின் கோபத்திற்கு ஆளாகினர்.
குடிப்பது பற்றிய தலைப்பான ‘காக்டெயில்’ படத்திற்கும் முருகர் கோலத்தில் உள்ள யோகிபாபுவின் போஸ்டருக்கும் என்ன சம்பந்தம் என படக்குழுவினரை வறுத்தெடுத்தார்கள்.
உடனடியாக படத் தயாரிப்பாளர் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அடுத்து இன்று வெளியிட்ட இரண்டாவது போஸ்டரில் படத்திற்கு ஏற்றபடி நகைச்சுவையான போஸ்டரை வெளியிட்டு முதலில் செய்த தவறை திருத்திக் கொண்டுள்ளார்கள்.

