கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே ‘ஸ்லீப் வாக்கர்ஸ்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ராதிகா ஆப்தே. திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நாயகியாக நீடிக்க முடியும் என தனது படங்கள் மூலம் நிரூபித்து வருகிறார். அடிக்கடி கவர்ச்சிப் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது இவரது வழக்கம். திரைப்படங்களிலும் துணிச்சலாக பல காட்சிகளில் நடித்து பாராட்டுகளைப் பெற்றவர்.
தமிழில் இவர் டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் என சில படங்களில் நடித்துள்ள போதும், கபாலி படம் தான் இவருக்கு மக்களிடையே நல்ல அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் திறமையான நடிகை எனப் பேர் எடுத்த ராதிகா ஆப்தே, தற்போது இயக்குநராகவும் மாறி இருக்கிறார். அவர் ஸ்லீப் வாக்கர்ஸ் என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் குல்சன் தேவய்யா, சஹானா கோஸ்வாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திடீரென இயக்குநரானது குறித்து ராதிகா ஆப்தே கூறுகையில், “நான் இயக்குனரானது திடீரென்று நடந்து விட்டது. இதன் மூலம் ஒரு படத்தை எப்படி இயக்க வேண்டும் என்று முழுமையாக கற்றுக்கொண்டேன்” என்றார்.
ஸ்லீப் வாக்கர்ஸ் படம் சமூகத்தை கேள்வி கேட்கும் வித்தியாசமான படமாக இருக்கும் எனவும், இந்த படத்தின் மூலம் ராதிகா ஆப்தே திறமையான இயக்குநர் என்ற பேரையும் பெறுவார் எனவும் அப்பட தயாரிப்பாளர் ஹனி ட்ரேஹன் தெரிவித்துள்ளார்.

