இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. இன்று கொழும்புவில் நடைபெற்று வரும் ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்திய வெற்றி பெற 239 ரன்களை இலங்கை நிர்ணயித்துள்ளது.
ஏற்கனவே ஒருநாள் தொடரை வென்று விட்ட நிலையில் இன்று இந்தியா தனது ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இலங்கையை கொழும்புவில் சந்தித்தது. டாஸ் வென்று, பேட்டிங் தேர்வு செய்தது இலங்கை அணி. கேப்டன் தரங்கா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். புதிய வேக பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். எனினும் புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சில் ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டு இருந்தது. பும்ரா பந்தில் தரங்கா 48 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு அந்த அணியின் ரன் வேகம் குறைந்தது. அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் விழுந்ததால் மேத்யூஸ் மற்றும் திரிமன்னே ஆகியோர் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இவர்கள் ஆட்டமிழந்த பின்னர் அந்த அணி வேகமாக விக்கெட்டுகளை இழந்தது.
அதிகபட்சமாக திரிமன்னே 67 ரன்களும், மேத்யூஸ் 55 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய புவனேஸ்வர் குமார் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். பும்ரா 2 விக்கெட்டுகளும், சஹால் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இலங்கையின் தனஞ்செயாவை ஸ்டம்பிங் முறையில் தோனி ஆட்டமிழக்க செய்த போது, அது அவருக்கு 100-வது ஸ்டம்பிங் ஆனது. இது புதிய உலக சாதனை ஆகும். இதற்கு முன்னர் இலங்கையின் சங்ககாரா அதிகபட்சமாக 99 ஸ்டம்பிங் செய்தததே சாதனையாக இருந்தது. இதன் மூலம் முதன் முறையாக 100 ஸ்டம்பிங் செய்த சாதனையை படைத்தார் தோனி.