தோல்வியை உங்களால் தாங்கிக்கொள்ள முடியுமா? தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள், தோல்வி பெற்றுவிடுவோமோ என்று பயப்படுபவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அவமானமாக தென் ஆப்பிரிக்க மண்ணில் 3-1 என டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது ஆஸ்திரேலியா. கடைசி டெஸ்ட்டில் 492 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி என்பது கடந்த 90 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா சந்திக்காத சறுக்கல்.
உலகுக்கே கிரிக்கெட் எப்படி ஆடப்படவேண்டும், கேப்டன்ஷிப் எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்த ஆஸ்திரேலியா இப்படி ஒரு மாபெரும் அவமானத்துக்குள் வந்துவிழும் என்பது யாருமே எதிர்பாராதது. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை கட்டி எழுப்பிய, ஆஸ்திரேலியாவின் மிக முக்கியக் கேப்டனான ஆலன் பார்டரை மறந்து, அவர் வழியிலிருந்து விலகியதுதான் இப்போதைய ஸ்மித்தின் அழிவுக்கும், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் அவமானத்துக்கும் காரணம்.
ஆலன் பார்டரிடம் வெற்றிபெற வேண்டும் என்கிற வெறி இருந்தது. ஆனால், தோல்விக்காக அவர் பயப்படவில்லை என்பதுதான் இன்றைய கிரிக்கெட் உலகம் நினைவுகூர வேண்டிய முக்கியப் பாடம். இதை வெறும் கிரிக்கெட் கேப்டன்ஷிப்போடு மட்டும் ஒப்பிடமுடியாது. ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இந்த இரண்டு ஆஸ்திரேலியர்களே உதாரணம்.
ஒரு தலைவன் இருக்கிறான்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை ஆலன் பார்டருக்கு முன், ஆலன் பார்டருக்குப் பின் என்று பிரிக்கலாம். ஐந்து உலகக்கோப்பைகளை வென்று கிரிக்கெட் உலகின் அசைக்கமுடியாத அணியாக இருக்கும் ஆஸ்திரேலியா, ஆலன் பார்டரின் வருகைக்கு முன்பு `தோத்தாங்கோளீஸ்’ என்று அவமானப்படுத்தப்பட்ட அணிதான்.
1983-ம் ஆண்டு முதல்முறையாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியை ஓரங்கட்டி உலகக்கோப்பையை வெல்கிறது இந்தியா. ‘இனி இந்தியாதான் கிரிக்கெட்டை ஆளப்போகிறது’ என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்தபோது தனி ஒரு மனிதனாக ஆஸ்திரேலியாவைக் கட்டி எழுப்பினார் ஆலன் பார்டர். அவர் கிரிக்கெட்டின் புதிய பேரரசாக ஆஸ்திரேலியாவை உருவாக்க இந்தியாவின் ஃபார்முலாவைப் பின்பற்றவில்லை.
1984-ம் ஆண்டு கிம் ஹியூஸிடமிருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் கேப்டன் பொறுப்பு ஆலன் பார்டருக்கு வந்தது. “தொடர் விமர்சனங்களால், அவமானங்களால் மனம் தாள முடியாத துயரத்தோடு கேப்டன் பொறுப்பைவிட்டு விலகுகிறேன்” என்று செய்தியாளர்கள் முன் அழுதுகொண்டே சொன்னார் ஹியூஸ். அந்த அழுகைதான் ஒருவகையில் பார்டரைப் பலப்படுத்தியது. “ `நாம் ஒரு தோல்வியடைந்த, நம்பிக்கையற்ற அணிக்குத்தான் கேப்டனாகப் பொறுப்பேற்கிறோம். ஆனால், நான் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது’ என்கிற முடிவை அப்போதுதான் எடுத்தேன்” என்கிறார் ஆலன் பார்டர்.
ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மேற்கு இந்தியத் தீவுகள் அணியை முதல் போட்டியில் சந்தித்தது. அடிலெய்டில் நடைபெற்ற அந்த டெஸ்ட்டில் 191 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஆஸ்திரேலியா. அடுத்தடுத்தும் தோல்விகள்தான். 1985 ஆஷஸ் போட்டியில் 1-3 என இங்கிலாந்திடம் தொடரை இழந்தது. ஆனால், தனியொரு பேட்ஸ்மேனாக ஆஸ்திரேலிய அணியை முதுகில் தூக்கிச் சுமக்க ஆரம்பித்தார் ஆலன் பார்டர். உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுக்க ஆரம்பித்தார். “நம்மால் வெற்றிபெற முடியாது. தோல்விதான் அடையப்போகிறோம். ஆனால், அவ்வளவு சீக்கிரத்தில் தோற்றுவிடக் கூடாது. எதிர் அணியின் வெற்றியைத் தாமதப்படுத்திகொண்டேயிருக்க வேண்டும்” என்பதுதான் ஆலன் பார்டர் கற்றுத்தரும் முதல் கேப்டன்ஷிப் பாடம்.
