டெஸ்ட் அரங்கில் அதிக முறை 600 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணியின் சாதனையை, கோஹ்லியின் இந்திய அணி தகர்க்க வேண்டும். இது எனது பயிற்சி காலத்தில் நடக்க வேண்டும்,’’ என, ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
பொதுவாக இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங்கில் பலம் வாய்ந்தது. டெஸ்ட் போட்டிகளில் சொல்லவே வேண்டாம், எளிதாக ரன்கள் குவிக்கும். சமீப காலமாக கோஹ்லி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் அரங்கில் 500, 600 ரன்களை சர்வ சாதாரணமாக எட்டுகிறது.
தற்போதைய இலங்கை தொடரில் முதல் இரு டெஸ்டில் இந்திய அணி 600 (காலே), 622/9 (கொழும்பு) ரன்கள் எடுக்க, டெஸ்ட் அரங்கில் இந்திய அணி மொத்தம் 29 முறை, 600க்கும் மேல் குவித்தது.
இவ்வரிசையில் ஆஸ்திரேலிய அணி (32 முறை) முதலிடத்தில் உள்ளது. இந்த சாதனையை எட்ட இன்னும் 3 முறை இந்திய அணி 600 ரன்னுக்கும் மேல் எடுக்க வேண்டும்.
இதுகுறித்து இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியது:
டெஸ்ட் அரங்கில் அதிக முறை 600 ரன்களை எட்டிய ஆஸ்திரேலியாவின் சாதனையை, இந்திய அணியால் எட்ட முடியும். கோஹ்லியின் அணி கட்டாயம் புதிய சாதனை படைக்கும்.
இது, இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு அல்லது வரும் காலங்கள் என, எப்போது நடக்கும் என கூற முடியாது. ஆனால், நான் பயிற்சியாளராக இருக்கும் காலத்துக்குள் (2019 உலக கோப்பை வரை) நடந்தால், மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.
இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.