திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கி தவிக்கும் 2 வயது சிறுவன் சுஜித்தை மீட்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திரைத் துறையினர் தங்கள் வேதனையை பதிவு செய்து வருகிறார்கள்.
கமல் டுவிட்டரில், ‛‛ஆழ்துளை கிணற்றில் பள்ளம் தெரியாமல் சிறு குழந்தைகள் விழுவது ஒரு தொடர் அவலமாக தமிழகத்தில் இருக்கிறது. ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றிபெற வேண்டும். ஆழ்துளை கிணறுகளை மூடாமல் விடுவதை குற்றமாகவும் அதற்கு பெருந்தொகை அபராதமாகவும் அரசு விதிக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
கார்த்தி கூறியதாவது: எத்தனை ஆண்டுகள் தான் இப்படி போர்வெல்லில் குழந்தைகள் விழுந்து கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கப் போகிறோம் எனத் தெரியவில்லை. இதற்கு மிகவும் வலுவான சட்டம் தேவை. முதலில் பயன்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளைத் தேடி மூட வேண்டும். சுஜித் மீண்டும் அவரது அம்மா கையில் சிரித்துக் கொண்டு இருக்க வேண்டிக் கொள்கிறேன் என்றார்.
சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில், 2 வயது குழந்தை சுஜித் நிச்சயமாக மீட்கப்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். மிகவும் வேதனையான ஒரு நிகழ்வு. நிச்சயமாக அந்த குழந்தை மீட்கப்பட வேண்டும். அந்த நல்ல செய்திக்காக அனைவருடனும் சேர்ந்து நானும் காத்திருக்கிறேன். நம்பிக்கையோடு. என்று தெரிவித்துள்ளார் சத்யராஜ்.
இதேப்போன்று பல திரைப்பிரபலங்கள் தங்களது வேதனையை வெளியிட்டு வருகின்றனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கும் சில நடிகர்கள் சென்று வந்த வண்ணம் உள்ளனர். நடிகர்கள் அபி சரவணன், விமல் ஆகியோர் நேரில் சென்று அங்கும் நடக்கு விஷயங்களை கேட்டறிந்தனர்.

