காத்மாண்டு, நேபாளத்தில், ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில், இந்திய பெண் ஒருவர் உட்பட, ௨௮ பேர் இறந்தனர்; ௧௬ பேர் படுகாயம் அடைந்தனர்.
அண்டை நாடான நேபாளத்தில், ராஜ்பிராஜ் பகுதியில் இருந்து, தலைநகர் காத்மாண்டுக்கு, நேற்று, பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. தாடிங் மாவட்டத்தில், ஒரு வளைவில் திரும்பிய போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், திரிசூலி ஆற்றில் விழுந்து கவிழ்ந்தது.
ராணுவத்தினரும், போலீசாரும் விரைந்து சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை, ௨௮ பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
மேலும், காயமடைந்த, ௧௬ பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்; மாயமான மற்ற பயணியரை தேடி வருகின்றனர். இறந்தவர்களில், இந்தியாவைச் சேர்ந்த, மம்தா தேவி தாக்குரும் ஒருவர்.
இது பற்றி போலீசார் கூறுகையில், ‘விபத்து நடந்த போது, பஸ்சில், ௫௨ பயணியர் இருந்ததாக, உறுதிப்படுத்தப்படாத தகவல் கிடைத்துள்ளது.
பனிமூட்டம் காரணமாகவே விபத்து நடந்து உள்ளது’ என்றனர்.