ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில், வங்கதேச அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. சூப்பர் 4 சுற்று கடைசி லீக் ஆட்டத்தில் ஓய்வளிக்கப்பட்ட 5 வீரர்களும் மீண்டும் அணிக்கு திரும்பினர். வங்கதேச அணியில் மோமினுலுக்கு பதிலாக நஜ்முல் இஸ்லாம் இடம் பெற்றார். தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ், மெகதி ஹசன் மிராஸ் களமிறங்கினர். மிராஸ் பொறுமையுடன் கம்பெனி கொடுக்க, அதிரடியில் இறங்கிய லிட்டன் தாஸ் இந்திய பந்துவீச்சை சிதறடித்தார்.அவர் 33 பந்தில் அரை சதம் அடிக்க வங்கதேச ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அந்த அணி 17.5 ஓவரிலேயே 100 ரன்னை எட்டியது. முதல் 20 ஓவர் வரை ஒரு விக்கெட் கூட விழாததால் இந்திய வீரர்கள் விழிபிதுங்கினர். லிட்டன் தாஸ் – மெகதி ஹசன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 20.4 ஓவரில் 120 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. இந்த நிலையில், மெகதி ஹசன் 32 ரன் எடுத்து (59 பந்து, 3 பவுண்டரி) கேதார் சுழலில் ராயுடு வசம் பிடிபட்டார்.முதல் விக்கெட் வீழ்ந்ததும் உற்சாகம் அடைந்த இந்திய வீரர்கள் தாக்குதலை தீவிரப்படுத்த… இம்ருல் 2, முஷ்பிகுர் 5, மிதுன் 2, மகமதுல்லா 4 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுத்தனர். 20.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 120 ரன் எடுத்திருந்த வங்கதேசம் 32.2 ஓவரில் 151 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் அபாரமாக விளையாடிய லிட்டன் தாஸ் 107 பந்தில் சதமடித்து அசத்தினார். அவர் 121 ரன் (117 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி குல்தீப் சுழலில் டோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்குக்கு பலியானார்.அடுத்து வந்த வீரர்களில் சவும்யா சர்க்கார் ஓரளவு தாக்குப் பிடிக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். சர்க்கார் 33 ரன் எடுத்து ரன் அவுட்டானார். வங்கதேச அணி 48.3 ஓவரிலேயே 222 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. முஸ்டாபிசுர் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த அணியின் 3 வீரர்கள் ரன் அவுட் முறையிலும், 2 வீரர்கள் ஸ்டம்பிங் செய்யப்பட்டும் ஆட்டமிழந்தனர். இந்திய பந்துவீச்சில் குல்தீப் 3, கேதார் 2, சாஹல், பூம்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 223 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நடப்பு சாம்பியன் இந்தியா களமிறங்கியது. பின்னர் தொடர்ந்து ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை எடுத்து வங்கதேச அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2018 ஆசிய கோப்பை ஒருநாள் தொடரின் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. பின்னர் 49.4 ஓவரில் இந்தியா 222 ரன்களை எடுத்ததால் ஆட்டம் சமனில் இருந்தது. பின்னர் 49.5-வது பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. இதனால் கடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி இல்லை என்றால் சூப்பர் ஓவர் என்ற பரபரப்பான கட்டத்தில், கடைசி பந்தில் கேதார் ஜாதவ் 1 ரன் அடித்து இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்வதை உறுதி செய்தார்.

