இன்றைய இளம் ரசிகர்களுக்கு தபு என்றால் தெரியுமா என்பது சந்தேகம்தான். ஹிந்தி நடிகையாக இருந்தாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நாயகியாக நடித்தவர். தமிழை விட தெலுங்கில்தான் அதிகம் நடித்திருக்கிறார். அங்கு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழில், “காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதியே” ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார்.
கடந்த, பத்து ஆண்டுகளாக தென்னிந்திய மொழிகளில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார் தபு. இப்போது தெலுங்கில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க திரிவிக்ரம் இயக்க உள்ள புதிய படத்தில், அல்லு அர்ஜுன் அம்மாவாக, அவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
திரிவிக்ரம் இயக்கும் படங்களில் அம்மா கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும். இதற்கு முன் தன் படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்த நடிகை இல்லாமல் புதிதாக ஒருவரை நடிக்க வைக்கலாம் என திரிவிக்ரம் முடிவு செய்தாராம். அதனால்தான் தபுவிடம் தற்போது பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
ஆனால், தபு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க இன்னும் சம்மதம் சொல்லவில்லையாம். எப்படியும் சம்மதிப்பார் என திரிவிக்ரம் நம்பிக்கையுடன் இருக்கிறார் என்கிறார்கள்.