தமிழ் திரைத்துறையை சார்ந்த இருவர், பொது தளங்களில் ஜாதி ரீதியாக தன்னை விமர்சிப்பதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருத்தத்தை பதிவு செய்துள்ளார். இது போன்ற செயல்களை திரைதுறையினர் கைவிட வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி எச்சரித்தார்.
சென்னை வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழ் திரைத்துறையை சேர்ந்த ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், லிங்குசாமி, பேரரசு, இசையமைப்பாளர் தீனா உள்ளிட்டோர் சந்தித்து பேசினார். பெப்சி அமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்திற்கான அழைப்பு மற்றும் திரைத்துறை சார்ந்த சில கோரிக்கைகளையும் முன் வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வமணி, ‛‛திரைத்துறையை சார்ந்த இருவர், பொது தளங்களில் தனது ஜாதியை முன்வைத்து விமர்சனம் செய்வது குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருத்தப்பட்டதாக தெரிவித்தார்.
தயவு செய்து இதுபோன்று பேசாதீர்கள். அரசியலில் தரம்தாழ்ந்த தனிமனித தாக்குதல்கள் கூடாது. குறிப்பாக ஜாதி, மத ரீதியான விமர்சனங்கள், உருவத்தை வைத்து விமர்சனம் செய்வதை கைவிடுங்கள். அப்படி இல்லாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வளர்ந்துவிட்ட நீங்கள் எதையாவது பேசிவிட்டு போய்விடுவார்கள், திரைத்துறையில் இருக்கும் நாங்கள் கஷ்டப்படுகிறோம் என்றார்.
அதேசமயம், அமைச்சரை விமர்சித்த அந்த இரண்டு நபர்கள் யார் என்பதை செல்வமணி கடைசிவரை கூறவில்லை.

