உலக அளவில் முன்னணியில் இருக்கும் ஒரே தமிழ் நடிகர் ரஜினிகாந்த் என்பது ‘பேட்ட’ படம் மூலம் மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. ‘பேட்ட’ படத்திற்குப் போட்டியாக ரிலீஸ் செய்யப்பட்ட ‘விஸ்வாசம்’ படம் தமிழ்நாட்டில் ‘பேட்ட’ வசூலை முறியடித்தாலும் வெளிநாடுகளில் ‘பேட்ட’ வசூலை நெருங்க முடியாமல் போய்விட்டது.
ஜனவரி 10ம் தேதியன்று அமெரிக்காவில் மட்டும் சுமார் 300 தியேட்டர்கள் வரை ‘பேட்ட’ படம் வெளியானது. பிரிமீயர் காட்சிக்கான டிக்கெட்டுகள் மட்டும் 20 யுஎஸ் டாலர் வரை விற்கப்பட்டது. ‘சிவாஜி’ படத்திற்குப் பிறகு ரஜினி நடித்த படத்தின் பிரிமியர் டிக்கெட்டுகள் அவ்வளவு விலைக்கு இப்போதுதான் விற்கப்பட்டுள்ளன. பிரிமீயர் காட்சி டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பே விற்றுத் தீர்ந்துவிட்டன.
அமெரிக்க வசூலாக 20 லட்சம் யுஎஸ் டாலரைக் கடந்து வசூலாகியுள்ள ‘பேட்ட’ படம் மூன்றாவது வாரத்திலும் 41 தியேட்டர்களில் இந்த வாரமும் ஓடுகிறது. வழக்கமான டிக்கெட் கட்டணத்திற்கு இப்போது கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாம். 25 லட்சம் யுஎஸ் டாலரைக் கடந்து 30 லட்சம் யுஎஸ் டாலரை இந்த வாரம் நெருங்கினால் அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அது பெரிய வசூல்.
தமிழ்நாட்டில் ‘பேட்ட’ படம் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நாளை, நாளை மறுநாள் விடுமுறை தினம் என்பதால் பல தியேட்டர்களில் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பரில் வெளிவந்த ‘2.0’ படமும் சென்னையில் இரண்டு தியேட்டர்களில் இப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

