அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள படம் ‘பிகில்’. கால்பந்து விளையாடும் தமிழக பெண்களைப் பற்றிய கதைதான் இந்தப் படம். விமர்சன ரீதியாக படத்திற்குப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால், பெண்களைப் பெருமைப்படுத்தும் படம் இப்போது சொல்லி வருகிறார்கள். ஆனால், படத்தில் பெண்களைச் சிறுமைப்படுத்தும் காட்சி ஒன்றிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பெண்கள் கால்பந்து அணியில் மிகவும் குண்டான வீராங்கனையாக நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் மகள் இந்திரஜா நடித்துள்ளார். ஒரு காட்சியில் அவரை படத்தின் நாயகனும், அந்த அணிக்கு கோச் ஆகவும் உள்ள விஜய், ‘குண்டம்மா, குண்டம்மா’ என கிண்டலடிக்கிறார். அந்தக் காட்சிக்கு சினிமா பிரபலங்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
உடல் தோற்றத்தை வைத்து சினிமாவில் நகைச்சுவைக் காட்சிகள் வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். அதிலும் விஜய் அப்படி ஒரு வசனத்தை பேச சம்மதித்திருக்கக் கூடாது என்றும் சொல்கிறார்கள்.
இதற்கு முன் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘சிவாஜி’ படத்தில் கருப்பு நிறப் பெண்களைப் பார்த்து ‘அங்கவை, சங்கவை’ என்று வைக்கப்பட்ட கிண்டலான காட்சிக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. ஷங்கரின் முன்னாள் உதவியாளரான அட்லி, இப்போது அதே போன்று ‘குண்டம்மா’ எனச் சொல்லி இப்படி ஒரு காட்சியை வைத்து எதிர்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

