நான் எடுக்கும் அடுத்த படத்தில், காதுகேளாத, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் தரும் சிறப்பு தொழிற்நுட்பங்களுடன் வெளியிட முயற்சி செய்வேன் என்று இயக்குனர் பா இரஞ்சித் கூறியுள்ளார். நேவிகேட்டர், மாற்றுத்திறனாளி பெண்களுக்கு சிறந்த உலக தங்குமிடம் மற்றும் டிசம்பர் 3 இயக்கத்தின் நண்பர்கள் ஆகிய அமைப்புகள் இணைந்து மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் இயக்குநர் பா.இரஞ்சித்துடன் இணைந்து, அவருடைய தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” திரைப்படத்தின் சிறப்புக் காட்சியானது மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது அந்த அமைப்பு நிர்வாகிகளிடம் பேசிய இயக்குனர் ரஞ்சித்,”மாற்றுத் திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் நாம் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம். அவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் கூட முழுமையானதாக இல்லை என்பதை அவர்களிடம் பேசிய போதுதான் நான் புரிந்து கொண்டேன்.
எனது அடுத்த திரைப்படங்களில் காதுகேளாத, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பம்ச தொழிற்நுட்பங்களை வைத்து நிச்சயம் படம் எடுக்க வெளியிட முயற்சி செய்வேன்” என்று இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களிடம் தெரிவித்தார். இந்த நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித், இயக்குநர் அதியன் ஆதிரை, நடிகர் தினேஷ், அந்த அமைப்பின் நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

