நடிகராக மட்டுமல்லாது, பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோ எடுப்பது போன்றவற்றிலும் ஆர்வம் உடையவர் அஜித். கடந்த பல ஆண்டுகளாக, ஆளில்லாத குட்டி விமானங்கள் என்று சொல்லப்படும் சிறிய ரக டிரோன்கள் தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவரது திறமையை பார்த்து சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்ஐடி., பிரிவு, வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்ஷா குழுவின் ஆலோசகராக நியமித்தது.
அஜித்தும், மாணவர்களுடன் இணைந்து சிறிய ரக ஆளில்லா விமானங்களை உருவாக்க உதவி வந்தார். அஜித்தின் ஆலோசனைப்படி தக்ஷா குழு உருவாக்கிய டிரோன், நீண்டநேரம் பறந்து சாதனை படைத்தது. ஆஸ்திரேலியாவின் நடந்த சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொண்டு பாராட்டை பெற்றதுடன், 2வது இடத்தையும் பெற்றது. தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இடம்பெற்ற தக்ஷா குழுவின், ஆளில்லா குட்டி ரக ஆம்புலன்ஸ் ரக டிரோன் அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், அஜித்திற்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளது. அதில், தக்க சமயத்தில் உதவிய அஜித்துக்கும், அவரது ஆலோசனைக்கும் நன்றி தெரிவித்துள்ளது. ஆளில்லா விமான தயாரிப்பு திட்டம் முழுமையாக முடிந்து விட்டதாகவும், அஜித்தின் பங்களிப்பு மேலும் தேவை என்றும் அண்ணா பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

