கேட்கும் தகவல்களை எல்லாம் அள்ளித்தந்து 100 கோடிக்கு மேலான மக்களை ஈர்த்திருக்கும் பிரபல தேடுதளமான கூகுள் நிறுவனம் இன்று தனது 20-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. இதனை சிறப்பிக்கும் விதமாக கூகுள் தளத்தின் இன்றைய டூடுல் பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பல சாதனைகளை படைத்து தன்னிகரற்று ஜொலிக்கும் நிறுவனமாக கூகுள் திகழ்கிறது. தேடுதளத்தில் தொடங்கி மென்பொருட்கள், ஆன்லைன் விளம்பரம், வன்பொருட்கள் என இணையத்தின் அனைத்து துறைகளிலும் பறந்து விரிந்திருக்கிறது. கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்த லேரி பேஜ், செர்ஜி பிரின் ஆகிய இரு மாணவர்களால் 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கூகுள் நிறுவனம் இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. கூகுள் நிறுவனம் பல்வேறு கிளைகளை நிறுவியுள்ள நிலையில் இதன் மொத்த தொழில்களும் ஆல்ஃபபெட் என்ற குடையின் கீழ் வந்துள்ளது. கூகுளின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக, கூகுளின் உருவாக்கம், கூகுள் செய்யும் வேலைகள், செயல்பாடுகளை கார்ட்டூன் மூலம் விளக்கும் வகையில் டூடுலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த டூடுலில் இறுதியாக ரஷ்ய, ஸ்பானிஷ், ஜப்பானிய, சீன உள்ளிட்ட பல மொழிகளில் பயனர்களுக்கு நன்றி தெரிவித்து முற்றிலும் அனிமேஷனால் கண்கவர் வடிவத்தில் முடித்துள்ளது.

