எம்மில் சிலருக்கு கண்களை அசைப்பதில் திடீரென சிரமம் ஏற்படலாம். சிலருக்கு நடந்து செல்லும் போது, அவர்களுடைய நடையில் மாற்றம் ஏற்பட்டு, தொடர்ந்து நடப்பதற்கு சமநிலை தவறலாம். கை, தோள் மற்றும் கால்களை விருப்பத்திற்கு ஏற்ப இயக்குவதில் அசௌகரியமான நிலை உண்டாகலாம். சரளமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென தடை ஏற்பட்டு, பேச்சில் குழப்பமும் தொடர்பின்மையும் ஏற்படலாம். இதுபோன்ற பாதிப்புகள் அல்லது குறைபாடுகள் ஏற்பட்டால், அதனை மருத்துவத்துறையினர் அடாக்ஸியா எனும் நரம்பு தளர்ச்சியால் உடல் இயக்கத்தை கட்டுப்படுத்த இயலாத நிலை என குறிப்பிடுகிறார்கள். இதற்கு தற்போது ஒருங்கிணைந்த சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணம் அளிக்கப்படுகிறது.

வார இறுதி நாட்களில் மது அருந்தும் பழக்கம், எம்மில் பலருக்கும் கட்டுப்பாடில்லாமல் அதிகரித்து, நாளாந்தம் இயல்பான அளவைவிட கூடுதலாக மது அருந்துபவர்களுக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். வேறு சிலருக்கு விற்றமின்கள் E, B-1,B12 ஆகியவற்றின் குறைபாட்டின் காரணமாகவும், விற்றமின் B6 குறைவாக இருந்தாலோ அல்லது கூடுதலாக இருந்தாலோ இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மல்டிபிள் ஸ்களீரோசிஸ், மூளைச் சிதைவு, மரபணு கோளாறு ஆகிய காரணங்களாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அண்மையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கண்டறிந்து இருக்கிறார்கள். பொதுவாக எம்முடைய உடல் முழுவதும் தசை ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளும் சிறு மூளையில் ஏதேனும் பாதிப்புகள் அல்லது காயங்கள் ஏற்படுவதனால் இத்தகைய குறைபாடு உண்டாகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இரத்த பரிசோதனை, எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை, மரபணு பரிசோதனை, லம்பா பஞ்சர் எனப்படும் முதுகு தண்டுவடத்தில் மேற்கொள்ளப்படும் பிரத்யேக பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை மருத்துவர்கள் உறுதிப்படுத்துவார்கள்.
இதனைத் தொடர்ந்து நடப்பதற்கு வாக்கர்ஸ் எனப்படும் சாதனத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்வர். இதனுடன் பிசிக்கல் தெரபி, ஓக்குபேஷனல் தெரபி, ஸ்பீச் தெரபி போன்ற சிகிச்சைகளை பிரத்யேகமாகவோ அல்லது ஒருங்கிணைந்தோ வழங்கி முதன்மையான நிவாரணத்தை அளிப்பார்கள்.
டொக்டர் கோடீஸ்வரன்
தொகுப்பு அனுஷா.